வரலாறு முழுக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் என்பவை ஏராளம். உதாரணமாக கீழ்வெண்மணியாக இருந்தாலும் சரி, கோகுல்ராஜ் கொலை வழக்காக இருந்தாலும் சரி, பாதிக்கப்பட்ட மக்களையே அரசும் காவல்துறையும் குற்றவாளியாக முன்னிறுத்துவது என்பது தொடர்கதை. அந்த வகையில் வேங்கை வயல் சம்பவத்திலும் நடந்து வருவதை தமிழ்நாடு அரசின் சிபிசிஐடி யின் குற்றப்பத்திரிகை காட்டுகிறது.
2022ஆம் ஆண்டு டிசம்பர் 26 தேதி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பொது வெளியில் தெரியவருகிறது. இதற்கு முன்பாகவே கடும் வயிற்றுவலியால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதில் கனகராஜ் என்பவரின் மகள் கோபிகா பாதிக்கப்படுகிறார். இந்நிலையில் முதல் புகாரை கனகராஜ் அளிக்கிறார். அந்த புகார் SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்குகிறது. அதன் பிறகு டிஎஸ்பி தலைமையிலான சிறப்புபடைக்கும் அதன்பிறகு சிபிசிஐடிக்கும் வழக்கு மாற்றப்படுகிறது.
விசாரணையின் குளறுபடிகள்:
குற்றப்பத்திரிக்கையில் 300-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட செல்போன் உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டது. டிஎன்ஏ, இரத்தமாதிரி பரிசோதனை செய்யப்பட்டது என இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கூறப்பட்டாலும் ஆரம்ப முதலே பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை குற்றவாளியாக்கும் முயற்சிகள் நடந்து வந்துள்ளது
2023ஆம் ஆண்டு ஜனவரியில் பிரபாகரன் என்பவர் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டு மிரட்டப் படுகிறார். விசாரணை என்ற பெயரில் புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட மக்கள் மிரட்டபடுவதை தொடர்ந்து டிஜிபி மற்றும் தலைமைச்செயலாளருக்கு புகார்கள் மக்கள் அளித்துள்ளனர். அறிவியல் பூர்வமான புலன் விசாரணையின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறும் அரசு பிரச்சினைக்குரிய குடிநீரை ஆய்வுக்கு உட்படுத்தவேயில்லை. அடிப்படை ஆதாரமான மலம் கலக்கப்பட்ட குடிநீர் தாசில்தார், BDO மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் திறந்து விடப்பட்டுள்ளது. அடிப்படை ஆதாரங்களை அழித்துவிட்டு என்ன வகையான புலன் விசாரணை நடைபெற்றது என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. மேலும் டிஎன்ஏ மற்றும் இரத்தமாதிரி பரிசோதனைகளில் இந்த நபர்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதுவும் தோல்விதான். அடிப்படை ஆதாரங்களை முன்பே அழித்துவிட்டனர். உண்மையான ஆதாரங்கள் இருப்பது போல ஊடகங்களுக்கு காணொளிகள் கசியவிடப்பட்டு பொதுவெளியில் கருத்துகளை திணிக்கின்றனர். வெளிப்படையான நேர்மையான விசாரணை செய்துள்ளதாக சிபிசிஐடி கூறுகிறது. வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் புகார்தாராருக்கு SC/ST act victim and witness rights chapter4(95)new amendment படி புகார்தாரருக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும். இது வரையில் புகார்தாரர் கனகராஜ் என்பவருக்கு அது வழங்கப்பட வில்லை .
கடைசியாக ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவின் கணவர் முத்தையாவை பழிவாங்கும் நோக்கில் இது செய்யப்பட்டதாகவும் இது தனிப்பட்ட பகைதான் காரணம், எனவே அரசின் அறிக்கையை நம்புங்கள், பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என அரசு கூறுகிறது இதிலும் பல சந்தேகங்கள் உள்ளது .
வேங்கை வயல், இறையூர் கிராமங்கள் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். வேங்கைவயலில் குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் ஆக இருந்த சண்முகம் கிராமசபை கூட்டத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு ஆதரவாக ஊரின் பிரச்சினைகாக குரல் கொடுத்துள்ளார் கடந்த காலங்களில் உள்ளாட்சி தேர்தலின் போது சண்முகம் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் வேங்கை வயல் மக்கள் தலைவராக இருக்கும் பத்மாவிற்கு வாக்கு செலுத்தியுள்ளனர் வாக்குறுதிகள் நிறைவேறாத காரணங்களால் கிராம சபை கூட்டத்தில் தலைவர் பத்மாவின் கணவர் முத்தையாவிற்கும் ஆப்ரேட்டர் சண்முகத்திற்கும் நடந்த வாக்குவாதத்தில் சண்முகம் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் முத்தையா தரப்பை சார்ந்தவர்கள் முறையான விசாரணைக்கு உட்படுத்தபடவேயில்லை. கிராமசபை தொடர்பான பிரச்சினைகள் எதுவும் விசாரணையில் கண்டுகொள்ளப்படவில்லை. மேலும் இறையூர் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைவது தடுக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு வழக்கு, இரட்டை குவளை தொடர்பான ஒரு வழக்கு என ஏற்கனவே வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம காலத்தில் அங்கு நடந்த எந்த ஒரு சாதிய பிரச்சினைகளும் விசாரணையில் கண்டுகொள்ளப்படவில்லை .
ஜனவரி 19-ல் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சில நாட்கள் கோரிய நிலையில்.சென்னை உயர் நீதிமன்றத்தில் 24 அன்று நடைபெற்ற வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கு விசாரணையில் 20ஆம் தேதியே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு பல்வேறு அரசியல் நெருக்கடிகள், நீதிமன்ற கண்டிப்புகள் பல்வேறு பொதுநல வழக்குகள் காரணமாக அவசரகதியில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.மேலும் ஆதாரங்களை நீதிமன்றம் விசாரிப்பதற்கு முன்பாகவே பொதுவெளியில் பரப்பப்படுகிறது . இதுதான் உண்மையான ஆதாரம் என பொதுவெளியில் கருத்துருவாக்கம் செய்கிறது அரசு .வன்கொடுமை வழக்குகளில் நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக சாட்சியங்கள் ஆதாரங்களை கசிய விடுவது சட்டபடி குற்றம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் இருக்கும்போது ஆதாரங்கள் பொதுவெளியில் வெளியானதன் பின்னணியில் அரசு இயந்திரங்களை ஏன் கேள்விக்கு உட்படுத்தக்கூடாது?
நீதிமன்ற விசாரணைக்கு முன்பாகவே ஒரு உண்மை தன்மையற்ற ஆதாரங்களை வெளியிடுவது என்பதும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்கள் குடிக்கும் நீரில் அவர்களே மலத்தை கலந்துள்ளனர் என ஒரு பரப்புரை செய்வதும் அதை பயன்படுத்தி ஒட்டுமொத்தமாக வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகும் பிரச்சாரங்களையும் சாதிய பிரச்சினைகளை உருவாக்குவதே தாழ்த்தப்பட்ட மக்கள்தான் என சாதியவாதிகள் கருத்துருவாக்கம் செய்ய துவங்கியிருக்கிறார்கள். ஆணவ கொலைகளுக்கு தனி சட்டம் கேட்டு போராடும் சூழலில் இது தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பை மேலும் பலவீனப்படுத்தவே செய்யும். இப்படியாக பல்வேறு குளறுபடிகள் விசாரணையில் உள்ளபோது சிபிசிஐடி குற்றப்பத்திரிகையையும் அரசின் அறிக்கையையும் சந்தேகப்படாமல் கேள்விக் உட்படுத்தாமல் புனித தன்மையோடு அணுக முடியாது. மறுவிசாரணை கோருவது, சிபிஐ விசாரணை கோருவது என்பது இதுபோன்ற விசாரணை குளறுபடிகளும், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளின் சாதிய மனநிலையே காரணமாகும்.
திமுகவின் கூட்டணி கட்சிகளில் விடுதலை சிறுத்தைகள், மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே குற்றப்பத்திரிகையை எதிர்த்து சிபிஐ விசாரணை கோரியுள்ளனர். மற்ற கட்சிகள் திமுகவின் நிலைப்பாட்டை சரி என கூறிவருகிறார்கள். பல்வேறு அமைப்புக்கள் இதை மறுவிசாரணைக்கு உட்படுத்த கோரியுள்ளனர் சில அமைப்புகள் கள்ள மௌனம் காக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான நீதி சில வழக்குகளில் கிடைத்துள்ளது. அதுவும் இதுபோன்ற பின்னடைவுகளை சந்தித்த பின்பே கிடைத்துள்ளது.எனவே உண்மை குற்றவாளிகளை கண்டறியவும் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டுவர குரல் கொடுப்பதும் சமத்துவத்தை விரும்பும் அனைவரின் கடமையாகும்.
. -நே. ராம்பிரபு
–