சிஐடியு மாநிலச் செயலாளர் இ. முத்துக் குமார் உட்பட தொழிலாளர்களை கைது செய்ததை கண்டித்து
18.09.2024 அன்று சென்னையில்
அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் ஆலையில் வேலைநிறுத்தம் செய்து போராடி வரும் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாட்டை தெரிவித்து, சிஐடியு தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இ. முத்துக் குமார் உட்பட தொழிலாளர்களை காவல்துறை சட்டவிரோதமாக கைது செய்ததை கண்டித்து 18.09.2024 அன்று சென்னையில் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது வருமாறு:
சாம்சங் இந்தியா ஸ்ரீபெரும்புதூர் ஆலையின் மொத்தத் தொழிலாளர்கள் 1723 பேர்களில் சுமார் 90 சதவிகிதம் பேர், திங்களன்று 8-ஆவது நாளாக தங்களது வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தனர். சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேரம் பேசும் உரிமை மற்றும் பெரும்பான்மை சங்கத்து டன் நிர்வாகம் பயனுள்ள பேச்சு வார்த்தையை தொடங்குவது ஆகியவை அவர்களின் கோரிக்கை களாகும். சாம்சங் நிர்வாகம் தனது சங்கம் இல்லா கொள்கையுடன் தொழிலாளர்களின் ஜன நாயக உரிமைகளை அடக்க முயல்கிறது. மேலும் தொழிற்சங்க சட்டம் 1926, தொழிற்சங்க தகராறு சட்டம் 1947 மற்றும் ஐஎல்ஓ (ILO) தீர்மானங் கள் 87, 98 மற்றும் சர்வதேச தொழி லாளர் தரநிலைகள் (ILS) ஆகிய வற்றின் மூலம் வழங்கப்பட்ட உரிமை களை வெளிப்படையாக மீறுகிறது.
பெரும்பான்மை சங்கத்துடன் விவாதித்து பிரச்சனைகளைத் தீர்க்க சாம்சங் நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது. இதன் காரணமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் திங்கள்கிழமை (செப். 16) அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணி நடத்த திட்டமிட்டனர்.
இதன் காரணமாக காஞ்சிபுரம் நகரம் முழு வதும் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டு, காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகில் உள்ள சிஐடியு அலுவலகத்திலிருந்த சிஐ டியு மாநிலச் செயலாளர் முத்துக்குமாரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்ப தற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துகளில் வந்த சாம்சங் தொழிலாளர்களை காவல்துறையினர் ஆங்காங்கே, பேருந்தை மடக்கி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
போராட்டத்திற்காக வந்த 120-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். மேலும் காலை யில் கைது செய்யப்பட்ட முத் துக்குமாரை மாலை வரை எங்கு வைத்திருக்கிறோம் என்பதை காவல்துறை தெரிவிக்கவில்லை. பின்னர் 8 மணியளவில் முத்துக் குமார், சசி, ரவி ஆகிய மூவரையும் காவல்துறை ரிமாண்ட் செய்துள்ளனர்.
தங்களது சட்டப்பூர்வமான ஜனநாயக உரிமையை வலியுறுத்தும் தொழிலாளர்கள் மீது மாவட்ட காவல்துறை அதிகாரத்துடன் நடந்து கொண்டதை கண்டிக்கிறோம். எந்த வொரு பன்னாட்டு வெளிநாட்டு நிறுவனமும் நமது நாட்டில் நிலவும் நாட்டின் சட்டங்களை சிதைக்க அனுமதிக்கப் படக் கூடாது.
சாம்சங் தொழிலாளர்களுக்கு, ‘சங்கம் அமைக்கும் உரிமை’ மற்றும் ‘கூட்டுப் பேரம் பேசும் உரிமை’ உள்ளிட்ட நாட்டின் சட்டங்கள் வழங்கியுள்ள உரிமைகளை உறுதி செய்ய வேண்டியது தொழிலாளர் நலத்துறையின் கடமையாகும்.
ஆனால் துரதிருஷ்டவசமாக தொழிலாளர் நலத்துறை நிர்வாகத்தின் நிர்பந்தத்திற்கு பணிந்து அதற்கு ஆதரவாக செயல்படுகிறது. இது தொழிலாளர் நலத்துறை அமைக்கப்பட்ட நோக்கத்திற்கே எதிரானதாகும். எனவே உடனடியாக தொழிலாளர் நலத்துறை தலையிட்டு தனது சட்டபூர்வமான கடமையை நிறைவேற்றுதன் மூலம் தொழிலாளர்களின் சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமையை பாதுகாக்க வேண்டும்.
தொழிற்சங்கங்களின் பதிவாளர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தொழிற்சங்கத்தை பதிவு செய்ய வேண்டும். தொழிற் தகராறு சட்டத்தின் படியான தொழிற்தாவாவில் தலையிட்டு தொழிலாளர்கள் உரிமையை பறிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபடக்கூடாது.
எனவே தமிழக அரசு இப்பிரச்சனைக்கு உடனே சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 18.09.2024 மாலை 4.00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாள்: 17.09.2024
தோழமையுடன்,
LPF HMS AITUC CITU INTUC AIUTUC AICCTU TUCC WPTUC MLF LLF LTUC
Leave a Reply