#தோழர்_ஜீவா_
நினைவு நாள் 18.1.2025
தமிழகத்தில் எத்தனையோ விடுதலைப் போராட்ட வீரர்கள், இலக்கியவாதிகள், பொதுவுடைமைக் கொள்கை கொண்டவர்கள், பேச்சாளர்கள், சுயமரியாதைக் கொள்கை உடையவர்கள் இருக்கலாம். ஆனால், அது அனைத்தையும் ஒருங்கே உடைய ஒரு தலைவர் என்றால் அது தோழர் ஜீவாதான்.
அவரின் 62வது நினைவு தினமான இன்று அவர் குறித்த சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
தோழர் ஜீவா 21 ஆகஸ்ட் 1907-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கு அடுத்துள்ள பூதப்பாண்டி என்னும் ஊரில் பட்டக்கார் பிள்ளை – உடையம்மாள் ஆகிய தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயது முதலே இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த ஜீவா, பத்தாம் வகுப்பு படிக்கும்போதே சுகுணராஜன், சுதந்திரவீரன் போன்ற நாவல்களை எழுதினார். நாடகங்ளை எழுதி இயக்கி அதில் நடிக்கவும் செய்தார். இலக்கியவாதியான அவர் இலக்கியச்சுவை, ஈரோட்டுப் பாதை சரியா, கலை இலக்கியத்தின் புதிய பார்வை, சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தன்னை கம்யூனிச சோசலிச தொண்டனாக முன்வைத்து சமதர்மக் கீதங்கள், சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா, சோஷலிஸ்ட் தத்துவங்கள் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். சுயமரியாதை, சாதி ஒழிப்பைப் பேசும் வகையில் புதுமைப்பெண், பெண்ணுரிமை கீதங்கள், மதமும் மனித வாழ்வும் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
தோழர் ஜீவா உண்மையான களப் போராளியாகவும் இருந்தார். தொழிலாளர் நடத்திய பல போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்திக் காட்டினார். 1946-ம் ஆண்டு நடைபெற்ற தொழிலாளர்கள் போராட்டத்தைத் தடுத்த நிறுத்தக் கோரி பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவிட்டது. ஆனால், போராட்டத்தைக் கைவிடாமல் ஜீவா தலைமையில் போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர்.
ஆத்திரம் அடைந்த பிரிட்டிஷ்காரர்கள், “இன்னும் ஒரு அடி எடுத்து வைப்போர் சுடப்படுவர்” என்றனர். அதைக் கேட்டதும் கோபம் கொண்ட தோழர் ஜீவா, ”எங்கே சுடு” எனத் தனது மார்பைக் காட்டினார். அதைக்கேட்டு அவர்கள் பின்வாங்கத் தொடங்கினர். காந்தியக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, ஒத்துழையாமை கொள்கைகளில் தன்னை இணைத்துக்கொண்டு அந்நிய துணிகளின் பயன்பாட்டைத் தவிர்த்தார் ஜீவா. 1927-ல் காந்தியின் பெயரில் ஒரு ஆசிரமம் நடத்தி வந்தார். அதைப் பார்வையிட வந்த காந்தி உங்களின் சொத்து என்ன எனத் தோழர் ஜீவாவிடம் கேட்க, ”தாய்நாடுதான் என் சொத்து” எனப் பதிலளித்தார் ஜீவா. அதைக் கேட்டு வியந்த காந்தி, “நீங்கள்தான் இந்தியாவின் சொத்து” எனப் பாராட்டினார். தான் முன்னோடியாக நினைக்கும் காந்தியடிகளே தன்னை புகழ்ந்துரைத்ததைப் பெரிதும் போற்றி மகிழ்ந்தார்.
ஒருமுறை காமராஜர் ஒரு அரசு விழாவுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, குடிசைகள் அதிகமாக இருந்த பகுதியில் தோழர் ஜீவாவின் வீடு இருப்பதாக அறிந்தார். உடனே விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் தோழர் ஜீவாவுக்கு வீடு தர நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால், அதை ஏற்க மறுத்த ஜீவா, தொழிலாளருக்காகப் போராடிய காலத்தை நினைவுகூரும் வகையில் அந்தக் குடிசையிலேயே தன் இறுதிக் காலத்தையும் கழிக்க விரும்பினார்.
சாதி ஒழிப்பு, சுயமரியாதை கொள்கையால் ஈர்க்கப்பட்ட தோழர் ஜீவா, பெரியாருடன் பல போராட்டங்களில் கலந்துகொண்டார். சாதி ஒழிப்பில் ஈடுபட்டு, ஊர் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தார். சாதி ஒழிப்புப் போராட்டத்துக்குப் பரிசாகக் கத்திக்குத்தும் அவருக்குக் கிடைத்தது. எனினும், அவர் தனது கொள்கையில் பின்வாங்கவில்லை.
தோழர் ஜீவானந்தம் சிறந்த பேச்சாளர், அவர் பேசுவதைக் கேட்க பல கூட்டங்கள் கூடும். அப்படி, 1932-ம் ஆண்டு சட்ட மறுப்பு ஆதரிக்கும் வகையில் ஒரு கூட்டம் நடந்தது. அப்போது ஜீவா பேசியதைக் கேட்டு வியந்த ஆங்கிலேயர்கள் இவரை மேற்கொண்டு பேச அனுமதித்தால் தங்கள் ஆட்சிக்குத்தான் ஆபத்து எனத் தீர்மானித்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுவே, அவரின் முதல் சிறைவாசம். சிறையில் கம்யூனிச மற்றும் சோசலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாளடைவில் தன்னை ஒரு பொதுவுடைமைத் தலைவனாக வளர்த்துக்கொண்டார் ஜீவா.
ஜீவாவின் வீட்டுக்கு ஒருமுறை வந்த காமராஜருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. வந்தவரை வீட்டுக்கு வெளியிலேயே நிற்க வைத்துவிட்டு உள்ளே சென்ற ஜீவா வெகுநேரம் ஆகியும் திரும்பவில்லை. காத்திருந்த காமராஜர் வீட்டுக்குள் சென்று பார்க்க, அங்கே, தன் வேட்டியை உலர்த்திக்கொண்டிருந்தார் ஜீவா. ஒரே வேட்டியையே துவைத்து உலர்த்தி காய வைத்து மீண்டும் பயன்படுத்துவதுதான் அவர் வழக்கம். இத்தனைக்கும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜீவா. ஒய்யாரமான வீடு கட்டி வாழ்ந்த தலைவர்களுக்கு மத்தியில் ஓலைக் குடிசையில் வாழ்ந்த உன்னத மனிதர் தோழர் ஜீவா.
1963-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதியன்று இந்தியாவின் சொத்து தன் உடலை மண்ணுக்கும் தன் உயிர்மூச்சான கொள்கைகளை மக்களுக்கும் விட்டுச் சென்று தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டது. அவரின் இறுதி ஊர்வலத்துக்கு அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், நாடக நடிகர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பெரும் கூட்டம் கூடியது. இறக்கும் வரையிலும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர் ஜீவா. மக்களுக்கான தலைவர்களாக காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர் எனப் பலர் இருந்த வேளையில் தலைவர்களுக்கே தலைவனாக இருந்தவர் தோழர் ஜீவா. அவரின் இறுதி ஊர்வலமே அதற்குச் சாட்சி.
– தோழர் பாரதிநாதன்