உலகில் உள்ள வாகன உற்பத்தியாளர்கள் அனைவரும் பெட் ரோல், டீசல் வாகனங்களிலிருந்து மின்சார வாகனங்களுக்கு மாறப்போராடி வரும் நேரத்தில், சீன வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. குறிப்பாக, Byd, கிரேட் வால், நியோ போன்ற சீன நிறுவனங்கள் குறைந்த விலையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி, அமெரிக்கா மற்றும் ஜப்பானிய நிறுவனங்களின் சந்தைப் பங்கை குறைத்து வருகின்றன. சீனாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் இந்தப் போக்கு தொடர்கிறது.
இந்நிலையில், ஜப்பானின் முன்னணி வாகன தயாரிப்பாளர்களான ஹோண்டா மற்றும் நிசான் ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இந்த கூட்டணியில் மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவனத்தையும் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையும் தொடங்கி உள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இணைப்பின் மூலம், உலகின் மூன்றாவது மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டணி மூலம் சுமார் 30 டிரில்லியன் யென் (அதாவது 191 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவுக்கு விற்பனை இலக்கை எட்டுவதோடு, 3 டிரில்லியன் யென்னுக்கும் அதிகமான இயக்க லாபத்தை எட்ட முடியும் என நம்புகின்றனர். 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து, 2026 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு புதிய கூட்டு நிறுவனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். முதல் கட்டமாக ஹோண்டா நிறுவனமே புதிய நிர்வா கத்தை வழிநடத்தும். ஒவ்வொரு நிறுவனத்தின் தனித் துவமான பிராண்டுகளும், கொள்கைகளும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளப்படும். மிட்சுபிஷி நிறுவனமும் இந்தக் கூட்டணியில் இணைந்தால் மூன்று நிறுவனங்களின் ஒட்டுமொத்த வாகன விற்பனை ஆண்டுக்கு 80 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணைப்பு சவாலானது: பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களின் இணைப்புகள் எப்போதுமே சவாலானவை. வெவ்வேறு தொழில்நுட்பங்கள், வாகன மாடல்கள், வணிக அணுகுமுறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பது சற்று சிக்கலான செயல். எதிர்த்து நின்றவர் இணங்கி வந்தால் எண்ணம் குழம்பும் என்பது போல பல ஆண்டுகளாக எதிரெதிராக கடைவைத் திருந்தவர்கள் ஒன்று சேரும்போது உருவாகக்கூடிய சிக்கல்கள் நிறையவே, சில திட்டங்களை கைவிட வேண்டியிருக்கும், சில தொழிற்சாலைகளை மூட வேண்டியிருக்கும். நிர்வாகிகள் தங்கள் அதிகாரங்களை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். நிசானுக்கு அமெரிக்காவில் இரண்டு வாகன தொழிற்சாலைகளையும், ஹோண்டாவுக்கு நான்கு தொழிற்சாலைகளும் உள்ளன. இரண்டும் இணைந்தால், சில தொழிற்சாலைகளை மூடி, ஆட்குறைப்பு மூலம் செலவுகளை குறைக்க முடியும். ஆனால், இது அரசியல் ரீதியாகவும் அரசாங்க ரீதியாகவும் எதிர்ப்புகளை சந்திக்கக்கூடும். ஏனெனில் அரசுகள் வேலை வாய்ப்புகளை பாதுகாக்கவே விரும்பும்.
வெற்றியும்… தோல்வியும்:-
ஃபியூஜியோட்-பியட் கிரைஸ்லர் இணைந்து ஸ்டெலான்டிஸ் உருவானபோது, பிரான்ஸ், இத்தாலி அரசுகள் தொழிற்சாலைகளை மூடுவதை எதிர்த்தன. கடந்த காலங்களில் டெய்ம்லர்- கிரைஸ்லர் கூட்டணியில் கலாச்சார வேறுபாடுகளும், சிக்கலான மேலாண்மை கட்டமைப்பும் பிரச்சினை களை உருவாக்கியது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி 2007-ல் பிரிந்தது. பிஎம்டபிள்யூ- ரோவர் இணைப்பு தோல்வியில் முடிந்தது. ஆனால், ஃபியட்-கிரைஸ்லர் இணைப்பு வெற்றிகரமான ஒன்று.அதேபோல ஹூண்டாய்-கியா இணைப்பும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஹோண்டா நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸுடன் கூட்டு சேர்ந்து ஹோண்டா ப்ரோலாக், அக்யூரா ZDX என்ற இரண்டு மின்சார எஸ்யுவி வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஆனால், இந்த
இரண்டு மாடல்களுக்கு அப்பால் இந்த கூட்டணியை நீட்டிக்க இரு நிறுவனங்களும் மறுத்துவிட்டன. தற்போது ஜெனரல் மோட்டார்ஸ், தென்கொரிய வாகன நிறுவனமான ஹூண்டாயுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது. நிசான் தற்போது கடுமையான நெருக்கடியில் உள்ளது. உலகளவில் 9,000 பணியாளர்களை குறைக்க வும், உற்பத்தியை 20 சதவீதம் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. சீனச் சந்தையில் விற்பனை சரிந்ததால், ஹோண்டாவின் லாபமும் 20 சதவீதம் குறைந்துள்ளது. எனவே மாறிவரும் வாகனத் துறையில் நிலைத்திருக்க இந்த இணைப்பு இரு நிறுவனங்களுக்கும் அவசியமானதாக கருதப்படுகிறது.
3-ம் இடத்தை பிடிக்க வாய்ப்பு:
இருப்பினும், ஹோண்டா-நிசான் இணைப்பு இரு நிறுவனங்களுக்கும் பெரும் பலனளிக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அமெரிக்கச் சந்தையில், இரு நிறுவனங்களும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கார்கள், எஸ்யுவி வாகனங்களை உற்பத்தி செய்கின் றன. அமெரிக்கர்கள் விரும்பும் பெரிய பிக்கப் டிரக்கு களை தயாரிக்கும் தொழில்நுட்பம் நிசானிடம் உள்ளது. ஆனால் ஹோண்டாவிடம் இது இல்லை. எனவே இந்தக் கூட்டணி ஹோண்டாவுக்கு எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா-நிசான் கூட்டணி ஜப்பானிய வாகனத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கவுள்ளது. இந்தப் புதிய கூட்டணி, உலகின் முன்னணி வாகன நிறுவனங்களான டொயோட்டா, வோக்ஸ்வாகனுக்கு அடுத்த இடத்தை பிடிக்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது.இருநிறுவனங்களின் வலிமையான தொழில்நுட்பம், சந்தை அனுபவம், புதுமை படைக்கும் திறன் ஆகி யவை இணையும்போது, உலகளாவிய வாகனச் சந்தை யில் ஒரு புதிய சகாப்தம் உருவாகும். குறிப்பாக மின்சார வாகனங்களுக்கான எதிர்காலத்தில் இந்தக் கூட்டணி முன்னோடியாக திகழ்ந்து, ஜப்பானின் வாகனத் துறையின் புகழை மேலும் உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.
சுப .மீனாட்சி சுந்தரம்
somasmen@gmail.com வணிகக் கட்டுரையாளர்
source- இந்து தமிழ்த்திசை நாளிதழ்
– தொழிலாளர் செய்திப் பிரிவு