அந்தக் கொடுமை நிகழ்ந்து அரை
நூற்றாண்டு ஆயிற்று. 1968 திசம்பர் 25 கிறிஸ்துமஸ் நாளில் கீழ வெண்மணியில் பட்டியலின மக்கள் வாழும் சேரியின் கடைக்கோடியிலிருந்த இராமையாலின் குடிசையில் 44 உயிர்கள் உயிரோடு. எரிந்து – உண்மையில் எரிக்கப்பட்டு –சாம்பலாயின. அது விபத்தன்று, படுகொலை!
இவ்வளவு கொடிய தண்டனை பெறுவதற்கு அவர்கள் செய்த குற்றம்? ஒரு குற்றமில்லை, பல குற்றங்கள்! நால்வர்ணத்துக்கு அப்பால் பஞ்சமர்களாக, பட்டியலின மக்களாக பிறந்தது. குற்றம்! அடங்கி ஒடுங்கி அடிமைவேலை செய்துகொண்டிருந்தவர்கள் விழிப்புற்று விவசாயத்தொழிலாளர் சங்கமாகத் திரண்டது குற்றம்! தங்கள் உழைப்புத் திறனுக்குக் கூடுதல் விலை, அதாவது.கூலி உயர்வு கேட்டது குற்றம்! ஆண்டைகளின் கட்டளையை மீறி செங்கொடி உயர்த்திச் சங்கஉரிமை கோரியது, உயிரே போனாலும் உரிமையை விட்டுக் கொடுக்க மறுத்தது எல்லாவற்றிலும் பெரிய குற்றம்!
என்ன நடந்தது என்று சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்:
அது சோறுடைத்த சோழநாடுஎனப்பட்டது மிகப் பெரிய சமநிலப் பரப்பாகிய காவிரித் தீரத்தின் கழிமுகப் பகுதி, அன்றைய ஒன்றுபட்ட தஞ்சையின் கீழ்ப் பகுதி! முப்போகம் செந்நெல் விளையும் நன்செய் நிலம்! ஆனால் இந்தச் செழிப்பெல்லாம் நிலக்கிழார்களுக்குத்தான்!’ அதிகாலை நிலத்தில் இறங்கி அந்தி சாயும் வரைநெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபட்டு,உழுது விதைத்து அறுப்பார்க்கு அற்பக் கூலிதான்!
விவசாயத் தொழிலாளர் என்று பெயரிட்டழைக்கப்பட்ட அந்த உழைப்பாளர்கள்.பெரும்பாலும் பட்டியல் இன மக்களாகவேஇருந்தனர்(பறையர்-பள்ளர்-சக்கிலியராகவேஇருந்தனர்). . அவர்கள் நிலமற்றவர்கள்,பொருளியல் வகையில் கொடுஞ்சுரண்டலுக்குமட்டுமல்லாமல், சமூக வகையில் தீண்டாமைக் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்கள்.அவர்களை அச்சுறுத்தி அடக்கி வைக்க சவுக்கடி, சாணிப்பால் தண்டனைகள் செயலாக்கப் பட்டன. சுருங்கச் சொல்லின் அவர்கள் மனிதர்களாக மதிக்கப்படவில்லை, இரண்டுகால் மாடுகளாகவே.நடத்தப்பட்டார்கள்.
இந்திய நாடு பிரித்தாளியருக்கு அடிமைப்பட்டிருந்த காலத்திலேயேகீழத்தஞ்சையில் உழவுத் தொழிலாளர்களைஅமைப்பாக அணிதிரட்டும் பணியில் பொதுமைஇயக்கம் (கம்யூனிஸ்டுக் கட்சி) ஈடுபட்டது. பி.சீனிவாசராவு _ போன்ற தலைவர்கள்அம்மக்களிடையே அயராதுழைத்து சங்கம் கட்டினார்கள்.
விவசாயிகள் சங்கமும் (விச), விவசாயத் தொழிலாளர் சங்கமும் (விதொச) வீறுகொண்டு.எழுந்தன. தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்என்பதைக் கண்டு கொண்ட உழைக்கும் மக்கள் சங்கத்தையும் அதன் அடையாளமானசெங்கொடியையும் உயிர்போல் மதித்தார்கள்.காவல்துறையின் கொலை வேட்டைக்கு எதிராகத்தங்கள் தலைவர்களையும் செயல்வீரர்களையும்பாதுகாத்தார்கள். அது குருதி தோய்ந்த நீண்ட வரலாறு, விவசாயிகள் இயக்கத்தின் வீர வரலாறு.
போராடும் தொழிலாளர்கள் கற்க வேண்டியவரலாறு.
தமிழக அரசியல் வரலாற்றில் 1967 ஒரு திருப்புமுனை எனலாம். அந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரசாட்சிக்கு திமுக தலைமையிலான கூட்டணி முடிவு கட்டிற்று அண்ணா தலைமையில் திமுக ஆட்சிபொறுப்பேற்றது. இது தமிழக மக்களிடையே பெரும்எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்தது. அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது போராட்டங்கள்வெடித்தன.
கீழத்தஞ்சையில், குறிப்பாக நாகை வட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் கூலி உயர்வுக்காகப் போராடினார்கள் குறிப்பாகக் குறைந்தபட்ச கூலிச்சட்டம் கோரினார்கள். விதொச அமைப்பு விரைவாக வளர்ந்தது ஊருக்கு ஊர் சங்கம் பரவியது, அடங்காச்செங்கொடி ஆர்ப் பரித்து பறந்தது. காலங்காலமாக அவர்களை அடிமைப்படுத்தி வந்த மிட்டா மிராசுகளான ஆண்டைகளுக்கு இது சகிக்கவில்லை அவர்கள் மிரட்டினார்கள் மிரட்டலுக்குப் பணியாத போது தாக்கினார்கள். மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள செவ்வியக்கம் வழிகாட்டிற்று.
காவல் துறை நிலக்கிழார்களின் சீருடையணிந்த அடியாள் படையாகவே செயல்பட்டது உழைப்பாளர்களை அடக்கி ஒடுக்குவதற்காகவே கிசான் போலீஸ் என்ற தனிப் பிரிவு உருவாக்கப்பட்டது. ஊருக்கு ஊர் நிலக் கிழார்களின் மாளிகைகளில் ஆயுதக் காவல் படை முகாம்கள் அமைக்கப்பட்டன .
தொழிலாளர் போரட்டத்தைச் சிதைப்பதற்காக வெளியூர் ஆட்கள்,குறிப்பாகத் தென் மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டார்கள். அவர்களில் சிலர் அடியாள் படையாகவும் செயல்பட்டார்கள்.பல இடங்களில் மோதல்கள் நடந்தன.பூந்தாழங்குடியில் காவல்துறை நடத்திய தூப்பாக்கிச்சூட்டில் பக்கிரி சுட்டுக்கொல்லப்பட்டார். சிக்கில் பக்கிரி வெட்டிக் கொல்லப்பட்டார்.ஆவராணி புதுச்சேரியில் மக்கள் காவல்துறையை திருப்பித்தாக்கினர்கள். தொழிலாளர்கள் பெரும்பாலும் பட்டியல் இன மக்களாக இருந்ததால் அவர்களுக்கு எதிராகச் சாதி இந்துக்களைத் திரட்ட நிலக்கிழார்கள் முயன்றார்கள். விதொச அமைப்பைக் கலைத்து விட்டு நெல் உற்பத்தியாளர் சங்கத்தில் சேர்ந்து விடும்படியும்,செங்கொடியை இறக்கி விட்டு உற்பத்தியாளர் சங்கத்தின் வெள்ளைக் கொடியை ஏற்றும்படியும்கட்டளையிட்டனர். கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தவர்களுக்குத் தண்டம் விதித்தனர். தண்டம் செலுத்த மறுத்தவர்களைக் கடத்திச் சென்றுமிரட்டல், அடிதடி, கொலை வரை செய்தனர்.அவர்கள் வசிக்கும் குடிசைகளைக் காவல்துறைப் பாதுகாப்போடு கொளுத்தினர்.உற்பத்தியாளர் சங்கம் என்று சொல்லிக் கொண்ட நிலக்கிழார் சங்கத்தின் தலைவராக இரிஞ்சூர்கோபாலகிருஷ்ண நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து எல்லாப் பக்கமும் கொடிய வன்முறை ஏவி விடப்பட்டது. ஆள் கடத்தலும் தீவைப்பும் நிகழ்ந்தன. கீழவெண்மணிக் கொடுமைக்கு சில நாள் முன்பே தீவைப்பு நிகழும்ஆபத்து இருப்பதாக மார்க்சியப் பொதுமைக் கட்சியின்எழுத்து வடிவில் எச்சரிக்கைப்புக் கோரியும் விண்ணப்பம்அனுப்பப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் அண்ணா அவர்களோ அரசு அதிகாரிகளோ இதை ஒருபொருட்டாகக் கொண்டு உடனே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் வெண்மணிக் கொடுமையைத்தவிர்த்திருக்க முடியும்.
கோபலகிருஷ்ண நாயுடு தலைமையில்நிலக்கிழார்கள் செய்து வந்த அட்டூழியங்கள் அரசுக்குத் தெரிந்தே நடந்தன. தமிழகச் சட்டப் பேரவையில் மார்க்சியக் கட்சி உறுப்பினர்கள் இதனை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்த போது முதல்வர் அண்ணா போராட்டத் தலைவர்கள் மீதே பழிசுமத்தினார் “அவர்கள் பகலில் மார்க்சிஸ்டுகள்,இரவில் நக்சலைட்டுகள்!” என்றார்..
அரைப்படி நெல் கூலி உயர்வுக்காக 44 பேர் உயிரை விட்டர்கள் என்று வெண்மணி குறித்துப் பலரும் சொல்லக் கேட்டிருப்பீர்கள். அது.கூலியுயர்வுக் கோரிக்கைக்காகத் தொடங்கிய போராட்டம்தான் ஆனால் செங்கொடியை இறக்கிவிட்டு உற்பத்தியாளர் சங்கக் கொடியை ஏற்ற ஒப்புக் கொண்டிருந்தால் அரைப் படிக்கு மாறாக ஒரு படிக்கூட உயர்த்திக் கொடுத்திருப்பார்கள்.கூலி உயர்வுக்காக தொடங்கிய போராட்டம் சங்க உரிமைகளுக்கானபோராட்டமாக வளர்ந்தது.நிலக்கிழார்கள் சங்க உரிமையை இவ்வளவு மூர்க்கமாக எதிர்க்க காரணம் கூலி உயர்வை மறுப்பது மட்டுமன்று.பள்ளப் பறையனுக்கெல்லாம் சங்கமா என்ற சாதிய பார்வையும்தான்.
1968 திசம்பர் 24 இரவு கிறிஸ்மஸ் முன்னந்திப் பொழுது உலக முழுவதும் தேவாலங்களில் வெண்கல மணிகள் ஒலித்துத் கொண்டிருந்தன. வண்ண வண்ண விண்மீன்கள் தேவகுமாரனின் வருகைக்காக கண்சிமிட்டிக்காத்திருந்தன, அதேபோது நாயுடுவின் அடியாட்கள். கீழ் வெண்மணிச் சேரிக்குள் படையெடுத்தார்கள்.மக்கள் எதிர்த்து நின்று அவர்களோடு.மோதியதில் இருகூர் பக்கிரி என்ற அடியாள் வெட்டுக் காயங்களால் உயிரிழந்தார்.இதனால் இருதரப்பும் அஞ்சிப் பின்வாங்கின. நிலக்கிழார்கள் தரப்பு வெறிகொண்டு தாக்கும் என்று மக்கள்அச்சப்பட்டார்கள். முக்கியமான கட்சித் தலைவர்கள் அந்த நேரம் ஒரு மாநாட்டுக்காக கேரளம் சென்றிருந்தார்கள் தோழர் ஏ.ஜி.கே. ஒரு வழக்கு,தொடர்பாக வெளியூரில் இருந்தார். உள்ளூர்த்தலைவர்கள் இளைஞர்களை சுற்றுப்பட்டஊர்களுக்கு அனுப்பி ஆள் திரட்டி வரச்சொன்னார்கள். பக்கிரி கொலையைக் காட்டி காவல்துறை தங்களைப் பிடித்துப் போகும் என்றுஅஞ்சிய பலரும் சேரிக்குள் தங்காமல் வெளியேறிவிட்டனர். எஞ்சியவர்கள் பெரும்பாலும் முதியவர்களும் பெண்களும் குழந்தைகளுமே.அஞ்சியபடியே அடியாட்களும் ஒரு வண்டி நிறைய ஆயுதக் காவலர்களும் காவல் துறையின் நீல வண்டியில் வந்திறங்கினார்கள்.கோபாலகிருஷ்ண நாயுடு, அவர் உறவினர் பாலுநாயுடு உள்ளிட்டவர்களும் நேரில் வந்து அடியாட்களுக்கும் ஆயுதக் காவலர்களுக்கும்.ஆணைகள் பிறப்பித்தார்கள்: ‘சுடுங்கடா!”
சீறி வந்த தோட்டக்களுக்கு அஞ்சி மக்கள் தென்னை மரங்களின் பின்னால் மறைந்து மறைந்து ஓடினார்(நான் பிறகு அங்கு சென்ற போது|தன்னை மரங்களில் தோட்டாக்கள் பாய்ந்த.அடையாளங்களைக் கண்டேன்.) இனி ஒளிவதற்கு மறைவில்லை என்ற நிலையில்தான் தெருக்கடைசியில் இருந்த இராமையாவின் சிறு கீற்றுக்.குடிசைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டார்கள்…அத்தோடு கும்பல் திரும்பி விடும் என்பது அவர்கள் எண்ணம்.
‘தீயவர்தாம் என்று நாம் நினைத்தோம்,
கொடுந்தீயிடுவார் என்று யார் நினைத்தார்?
பெண்ணுக்குப் பேய் கூட இரங்கும்.
என்பாரே?
பேயினும் கொடியவர் தீயிலிட்டாரே?”
என்று பிற்காலத்தில் பாட்டுக்கட்டிப் பாடினார்கள், அதுதான் நிகழ்ந்தது. உயிரோடு அவர்களைச் சிதையிலிட்டு, அவர்களின் அலறலை அந்த கொடுநெஞ்சர்கள் சிரித்துக்கொண்டாடினார்கள். தாய் ஒருத்தி தன் கைக்குழந்தையை எரியும் குடிசையிலிருந்து வெளியே வீசிய போது, அடியாள் ஒருவன் அந்தப் பிஞ்சுக்குழந்தையை அரிவாள் கொண்டு இருதுண்டாகவெட்டி நெருப்பில் வீசினான். எல்லாம் முடிந்து கரிக்கட்டைகளும்சாம்பலுமாய்ப் பெரும்பாலும் பெண்கள்,குழந்தைகள், வயோதிகர்களாக 44 உயிர்கள் கணக்கிடப்பட்டன இராமையாலின் குடும்பத்தில் மட்டும் 11 பேர்! அந்தக் குடும்பத்தில் எஞ்சியது.ஒரே ஒரு சிறுவன்தான்] அவன் பெயர் நந்தன்!
கீழ வெண்மணி நெருப்பு அணைந்து அரை நூற்றாண்டு ஆன பிறகும் தமிழகத்து உழைக்கும்.மக்களின் நெஞ்சத்தில் அது அணையவில்லை.அனைத்து வகைச் சுரண்டலையும்ஒடுக்குமுறையையும் பொசுக்கியழிக்கும் வரை அது.
அணையாது! அணைய விடோம்!