சட்டமன்ற தேர்தல்கள் சரியான தேதிகளில் நடப்பதைபோல உள்ளாட்சி தேர்தல்களை ஏன் நடத்த மறுக்கிறார்கள்? எளியோருக்கான அதிகாரம் என்பது அவ்வளவு ஏளனமாகிவிட்டதா? ‘உள்ளாட்சித் தேர்தல்களை தள்ளிப் போடும் அதிகாரம் யாருக்கும் இல்லை’ என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே உதாசீனப்படுத்தலாமா?
தள்ளிப்போட்டுக் கொண்டே போகிறது, தற்போது நடக்க வேண்டிய ஊரக உள்ளாட்சித் தேர்தல்களைத் இன்றைய அரசு. கடந்த அதிமுக ஆட்சிதான் 2016 இல் நடக்க வேண்டிய ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை பல ஆண்டுகள் தள்ளிப் போட்டது என்று பார்த்தால், தற்போது ஆளும் திமுக அரசும், நாங்களும் அவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்கிறது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமோ, தமிழக அரசு என்ன சொல்கிறதோ அதற்குத் தலையாட்டத் தயாராக இருக்கிறது.
வெளியாகாத தேர்தல் அறிவிப்பு
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில், ஊரக உள்ளாட்சி பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்று 27 மாவட்டங்களில் இருந்த 91,975 தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் பதவி காலம் வரும் ஜனவரி 5 (2025) ஆம் தேதி அன்று முடிவடைகிறது.
ஆக, அதற்குப் பிறகு 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி இருக்காது.
2019 உள்ளாட்சித் தேர்தல்களுக்குப் பிறகு, 28.12.2020 இல் நாகப்பட்டினத்திலிருந்து, மயிலாடுதுறை தனிமாவட்டமாகப் பிரிக்கப்பட்டதால், தற்போது 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளின் பதவிக் காலம் முடிவடையும் தருவாயில் உள்ளது.
நியாயப்படி தற்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இந்த தேர்தல் குறித்த சட்டப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு, சம்பந்தப்பட்ட 28 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்து இதுவரை எந்த பொது அறிவிப்பும் மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படவில்லை.
சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 243E(3)(a), ஊரக உள்ளாட்சிகளின் பதவிக் காலமான 5 ஆண்டுகள் முடியும் முன்பு, அவற்றுக்கானத் தேர்தல் நடத்தி முடிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இந்தக் கடப்பாடு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 243K இன்படி, மாநிலத் தேர்தல் ஆணையங்களுக்கு உரியது. 243K (3) இன் படி, இதற்கு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் பொறுப்பு, மாநில அரசுக்கு உண்டு!
எதிர்பாராத வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் அல்லது மாநிலத்தில் நிலவும் அதி அவசரச் சூழல் போன்ற அசாதாரண உண்மைக் காரணங்கள் தவிர்த்து, வேறெந்த காரணத்திற்காகவும் 243E பிரிவைக் கடைபிடிக்காமல் இருக்கக் கூடாது என்பது உச்சநீதிமன்றம் (W.P. NO. 719/95, SUPREME COURT OF INDIA, 1997) மற்றும் பல்வேறு உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் நிறுவியுள்ளச் சட்ட நிலைப்பாடு. அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 243E(3)(a)யை கடைபிடிக்காமல் இருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது.
வார்டு மறுவரையறையைக் காரணம் காட்டலாமா?
தமிழ்நாட்டில் பல நூற்றுக்கணக்கான கிராம ஊராட்சிகள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைக்கப்படுவதாகவும் அதனால், வார்டு மறுவரைப் பணிகள் இருக்கும் என்பதால், உள்ளாட்சித் தேர்தல்கள் தள்ளிப் போகலாம் என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், வார்டு மறுவரையறைப் பணிகளைக் காரணம் காட்டி, அரசியலமைப்புச் சட்டப்படி 5 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைவதற்குள் நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்களை, நடத்தாமலிருக்கக் கூடாது எனவும், இதில் மாநில தேர்தல் ஆணையமோ, மாநில அரசோ ஏன் உச்சநீதிமன்றமோ கூட இந்த அரசியலமைப்புக் கடப்பாட்டை மீறிச் செயல்பட முடியாது எனவும் SURESH MAHAJAN Versus STATE OF MADHYA PRADESH & ANR {W. P [(CIVIL) NO. 278 OF 2022]} வழக்கில், மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அழுத்தம் திருத்தமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
மாநில தேர்தல் ஆணையம் செய்ய வேண்டியது என்ன?
உள்ளாட்சித் தேர்தல்களைப் பொருத்தவரை, மாநிலத் தேர்தல் ஆணையங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தைப் போல அதிகாரம் கொண்டவை. அவை மாநில அரசின் கைப்பாவையாக இருக்கக் கூடாது எனவும் சுதந்தரமாகச் செயல்பட வேண்டுமெனவும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளும் தெளிவுபடுத்தியுள்ளன. உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பான முக்கிய வழக்கான, கிஷன் சிங் தோமர் எதிர் அகமதாபாத் மாநகராட்சி [Appeal (Civil) : 5756 of 2005] வழக்கின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதில் மாநில தேர்தல் ஆணையங்கள் சுதந்தரமாகவும் திறம்படவும் செயல்பட வேண்டுமென்பதையும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்துவதில் சம்மந்தப்பட்ட மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாத போது, முதலில் உயர்நீதிமன்றத்தையும், பிறகு உச்ச நீதிமன்றத்தையும் நாடி, தங்களுடைய அரசியலமைப்புச் சட்டக் கடமையை நிறைவேற்ற வேண்டுமென்பதையும் வலியுறுத்துகிறது.
கேள்விக்குரியாகும் சமூகநீதி
தமிழ்நாட்டில், உள்ளாட்சிகளில் 50 சதவீத இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டியல் பழங்குடி மக்களுக்கும், அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டு உரிமை உண்டு. எனவே, எதையாவது காரணம் சொல்லி, நடக்க வேண்டிய ஊரக உள்ளாட்சித் தேர்தல்களைத் தள்ளிப்போட்டால், அவர்கள் அடுத்து தேர்தல் வரும் வரை, போட்டியிடும் உரிமையை இழந்து விடுகிறார்கள். ஒடுக்கப்பட்ட பின்புலத்திலிருந்து வந்து திறம்படச் செயல்படும் எத்தனையோ ஊராட்சித் தலைவர்கள், தேர்தல் நடக்கவில்லையெனில் அவர்களுக்கும் மக்களுக்குமான தொடர்பு குறைந்து போய், அவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பும் குறையும். மூச்சுக்கு முந்நூறு முறை சமூக நீதி குறித்து பேசும் திமுக இது குறித்து யோசிக்க வேண்டும்.
மக்கள் சந்திக்கவிருக்கும் சவால்கள்
சம்பந்தப்பட்ட 28 மாவட்டங்களில், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 வரை உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாததால், குடிநீர், தெருவிளக்கு, சாலை, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவற்றில் மக்கள் பல இன்னல்களைச் சந்தித்தார்கள். தனி அலுவலர் மூலம் நடந்த ஊராட்சி நிர்வாகத்தில், ஊழல் ஆறு பெருக்கெடுத்து ஓடின. தற்போது, உள்ளாட்சித் தேர்தல்கள் உரிய காலத்தில் நடைபெறாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகத்திற்கு மாற்றாக, தனி அலுவலர் நிர்வாக முறை மீண்டும் அமைந்து விடுமோ, தங்கள் கதி என்னவாகுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மனதில் நிலவி வருவதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசியல் கட்சிகள் அழுத்தம் தர வேண்டும்
28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்த வலியுறுத்தி, சமீபத்தில் தன்னாட்சி, அறப்போர், Voice of People, Institute of Grassroots Governance [IGG] & தோழன் ஆகிய அமைப்புகளின் சார்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் திருமதி பா.ஜோதி நிர்மலாசாமி இ.ஆ.ப., (ஓ) மற்றும் முதல்வரின் செயலாளர்-II டாக்டர் எம்.எஸ். சண்முகம் இ.ஆ.ப., ஆகியோரை நேரில் சந்தித்தோம். கடந்த 17.12.2024 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும், இது குறித்து விரிவாக விளக்கினோம். அடுத்து மக்கள் போராட்டங்களுக்கும் சட்டப் போராட்டத்திற்கும் திட்டமிடுகிறோம். எங்களைப் போன்ற சிவில் சமூக அமைப்புகள் களம் கண்டாலும், அரசியல் கட்சிகள் இதில் தெளிவான அழுத்தமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை அரசியல் கட்சிகள் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, ஆளும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்தக் கோரி, அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
தேர்தல்கள் தான் ஜனநாயகத்தின் உயிர்நாடி. உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தாமல் இருப்பது, ஜனநாயகப் படுகொலையன்றி வேறல்ல. எனவே, தமிழ்நாட்டில், ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் 28 மாவட்டங்களில், உடனடியாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தி முடித்திட, சிவில் சமூகம், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், ஊடகங்கள் என அனைவரும் குரல் கொடுக்க முன்வருவோம். இன்னொரு முறை தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களைத் தள்ளிப் போட வேண்டுமென்ற எண்ணம் யாருக்கும் எழக்கூடாத வகையில் நம் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!
“ஜனநாயகம் என்பது வேடிக்கை பார்க்கும் விளையாட்டல்ல. அது மக்கள் பங்கேற்கும் நிகழ்வு. நாம் பங்கேற்கவில்லையெனில், அது ஜனநாயகமாக நீடிக்காது” என்று மைக்கேல் மூர் அவர்கள் கூறியுள்ளது முற்றிலும் சரியானது.
கட்டுரையாளர்; க. சரவணன்,
சமூகச் செயற்பாட்டாளர்
Disclaimer: அறம் இணையதளத்தில் டிசம்பர் 19 ல் வெளியான கட்டுரை.
– தொழிலாளர் செய்திப் பிரிவு