முதலாளித்துவ சமுதாயம் எப்பொழுதுமே இருந்து வந்திருக்க வில்லைதான் என்று இயக்க மறுப்பு இயல்வாதிகள் ஒத்துக்கொள் கிறார்கள். அதற்கு ஒரு வரலாறு உண்டு என்றும் சொல்கிறார்கள்.ஆனால் ஒன்று, முதலாளித்துவம் தோன்றியவுடன் சமுதாயத்தின்
பரிணாம வளர்ச்சி முடிவடைந்து விட்டதென்றும், எனவே சமுதாயம் முதலாளித்துவம் இனிமேல் இன்று இருக்கிறபடியே “நிலையாக” இருந்து வருமென்றும், அவர்கள் கருதுகிறார்கள். யாரோ எப்பொழுதோ ஒரு குறிப்பிட்ட வினாடியில் முழுமையாக உருவாக்கி வைத்துவிட்ட மாதிரி அவர்கள் எல்லாப் பொருட்களையும் பார்க்கிறார்கள். ஒவ்வொரு பொருளும் ஒரு புதிய இயக்கப் போக்கின் ஆரம்பம் என்று அவர்கள் கருதுவதில்லை. இந்தப் பிரபஞ்சத்தைக் கடவுள் படைத்தார் என்கிற கதை இருக்கிறதே. அது என்ன? ஒரு குறிப்பிட்ட கணத்திலே முழுவடிவத்தில் தோன்றிய பொருட்களின் ஒரு முழுமையே இந்தப் பிரபஞ்சம் என்று விளக்குகிற ஒரு விளக்கம் தான் அது. ஒவ்வொரு நாளைக்கும் ஒரு குறிப்பிட்ட வேலையைக் கடவுள் செய்து முடித்தார். தாவர உயிரினங்களை அவர் படைத்தார் மிருக உயிரினங்களை படைத்தார் . மனிதனைச் படைத்தார் இப்படிப் படைத்ததோட சரி, சகலமும் நிலை பெற்றுவிட்டன. ஆக, இந்த விளக்கத்திலிருந்துதான் ஸ்திரவாதம் (Fixism) என்ற தத்துவம் பிறக்கிறது.
இயக்க இயல் கணிக்கிற கணிப்பு இதற்கு நேர்மாறானது. “நிலை பெற்ற பொருட்களாக” அது விஷயங்களைப் பார்க்கிறதில்லை. பொருட்களை அவற்றின் “இயக்க நிலையிலே” வைத்து அது பார்க்கிறது. இயக்க இயலைப் பொறுத்த வரையில், எதுவும் முடிவானதல்ல; ஒவ்வொன்றும் ஒரு இயக்கப் போக்கின் முடிவாகவும் மற்றொரு இயக்கப்போக்கின் ஆரம்பமாகவும் இருக்கின்றது; ஒவ்வொன்றும் எப்பொழுது பார்த்தாலும் மாறிக் கொண்டே யிருக்கிறது. வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அதனால்தான் முதலாளித்துவ சமுதாயம் சோஷலிஸ்ட் சமுதாயமாக மாறும் என்று நாம் அவ்வளவு சர்வ நிச்சயமாகக் கருதுகிறோம். ஏனெனில் எதுவும் இறுதியாக நிறைவுற்ற நிலையை எய்துவதில்லை. என்றென்றைக்கும் வளர்ச்சி இருந்து கொண்டேதானிருக்கும்.
இதையெல்லாம் கேட்ட பிறகு இயக்க இயல் என்பது எதோ முடியாதபடி நடந்து தீரக்கூடிய விஷயம் என்று நினைத்துவிடக்கூடாது
ஏனெனில் அப்படி நினைக்க நேரிட்டால் என்ன ஆகும்? “நாம் விரும்புகிற மாறுதல் சர்வ நிச்சயமாக ஏற்பட்டுத் தீரும் என்று சொல்கிறோமே? அப்படியானால் நாம் ஏன் போராட வேண்டும்? சும்மா இருந்தாலும் அது வரத்தானே செய்யும்” என்ற முடிவுக்கு வந்துவிடுவோம் இது முக்கியமாகக் கவனிக்கத் தக்கது ஏனெனில், மார்க்ஸ் சொல்கிறது போல், “சோஷலிஸம் பிறப்பதற்கு ஒரு மருத்துவச்சி இருக்க வேண்டியது அவசியம்” அதனால்தான் ஒரு புரட்சி அவசிய மாகிறது. முன்னே சொன்னது போல், விஷயங்களெல்லாம் அவ்வளவு எளிதானவையல்ல. இந்த மாறுதல் ஏற்படுவதைத் தடுக்கவோ துரிதப் படுத்தவோ சக்தி பெற்றிருக்கிற மனிதர்கள் வகிக்கும் பாத்திரத்தை நாம் மறக்கலாகாது
ஒவ்வொரு பொருளிலும் விஷயத்திலும் இயக்கப் போக்குகளின் சங்கிலி இணைப்பு ஒன்று இருக்கிறது. இந்த இயக்கப் போக்குகள் எல்லாம் அந்தந்தப் பொருளினுள்ளேயிருக்கும் உள் இயக்கச் சக்தியின் விளைவாக ஏற்படுகின்றன, என்பதைத்தான் நாம் இப்போது பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம். நாம் முன்னே வலியுறுத்தியது போல் இயக்க இயலைப் பொறுத்தமட்டில் எதுவுமே முடிவாக பூர்ணத்துவம் பெற்று விடுவதில்லை, நிறைவு பெற்று விடுவதில்லை. பொருட்களின், விஷயங்களின், வளர்ச்சிக்குக் கடைசி காட்சி என்று ஒன்றுங் கிடையாது. இந்த உலகத்திலே, ஒரு நாடகம் முடிந்தவுடனே இன்னொரு நாடகத்தின் முதல் அங்கம், முதல் காட்சி, தொடங்கி விடுகிறது.
-ஜார்ஜ் பொலிட்ஸர் மார்க்சிய மெய்ஞ்ஞான நூலிருந்து..