
காரல் மார்க்ஸ் க்கு
சிலை வைத்துவிடுவோம் !
எமதன்பு இடதின் தோழர்களே –
ஆன்ம திருப்தி கொள்ளுங்கள் !
காரல் மார்க்ஸ் க்கு
சிலை வைத்துவிடுவோம் !
விற்பனையாகும் பண்டம் – எது
வியாபாரிக்குத் தெரியாதா ?
காரல் மார்க்ஸ் க்கு
சிலை வைத்துவிடுவோம் !
தொழிலாளர் சங்கம் – அமைக்க
உரிமை இல்லை.
பணிப் பாதுகாப்பு – இங்கு
அறவே இல்லை.
ஒடுக்கு முறைகளுக்கோ
பஞ்சம் இல்லை
போராடும் உரிமை
யார்க்கும் இல்லை
அதனாலென்ன ?
காரல் மார்க்ஸ் க்கு
சிலை வைத்துவிடுவோம் !
எமதன்பு இடதின் தோழர்களே –
ஆன்ம திருப்தி கொள்ளுங்கள் !
காரல் மார்க்ஸ் க்கு
சிலை வைத்துவிடுவோம் !
நன்றியுடனிருங்கள் ! நல்லதென்று சொல்லுங்கள் !
பாயாசம் தானிங்கு தீர்வென்று
முழங்குங்கள் !
காரல் மார்க்ஸ் க்கு
சிலை வைத்துவிடுவோம் !
12 மணி நேர உழைப்புச் சுரண்டல்
பாதுகாப்பில்லாத பணிச் சூழல்
காண்டராக்ட் எனும் அத்தக்கூலிமுறை
அம்பானிக்குக் கம்பளம்
கார்ப்பரேட்க்குக் காவல்
மறுக்கப்படும் சங்க உரிமை
நசுக்கப்படும் மாணவர் அமைப்பு
கண்டு கொள்ளப்படாத விவசாயிகள்
கொல்லப்படும் மக்கள் போராளிகள்
பறிக்கப்படும் நிலத்தின் உரிமை
பிடுங்கப்படும் வாழ்வாதாரம்
கட்டுப்பாடற்ற காவல்துறை
சித்திர(வதை) இங்கு வழக்கம் ஆக ….
பதட்டம் வேண்டாம் கேளுங்கள் !
காரல் மார்க்ஸ் க்கு
சிலை வைத்துவிடுவோம் !
எமதன்பு இடதின் தோழர்களே –
ஆன்ம திருப்தி கொள்ளுங்கள் !
காரல் மார்க்ஸ் க்கு
சிலை வைத்துவிடுவோம் !
மார்க்ஸின் சிலையில்
என்ன எழுதலாம் ?
“உலகத் தொழிலாளர்களே !
ஒன்று படுங்கள்” ?
எதற்காக ? எனக் கேட்பார்கள்.
எதற்கெதிராக ? எனக் கேட்பார்கள்.
புதிதா நமக்கு ?
பாசிச எதிர்ப்பு என்றே சொல்லி
பாசிச மாடல் கூட்டோடிணைந்து
பாசிசம் இங்கு வளர்த்தெடுத்தாலும்
கவலை வேண்டாம் – கேளுங்கள்.
காரல் மார்க்ஸ் க்கு
சிலை வைத்துவிடுவோம் !
ஆனாலும் என் தோழர்களே !
ஒருநொடியேனும் உண்மையாக
உள்ளக்கிடை சொல்லுவதெனில்,
இப்படித்தான் இங்கு எழுதியாகனும்
“உலக தொழிலாளர்கள் ஒன்றுபடட்டும். உள்ளூர் தொழிலாளர்களே கம்முன்னு இருங்கள்”
——-
காரல் மார்க்ஸின் சிலையை எதிர்க்கிறீர்களா ? – என்கிறார்கள்.
ஆமாம். மார்க்ஸை அல்ல.
மார்க்ஸின் பேரால் நடைபெறும் போலித்தனங்களை ….
திரிபுகளை, கயமைகளை,
பாட்டாளி வர்க்கத்தை ஏமாற்றும் போக்கை …
நன்றி !
-தோழர் .Lingam deva