
நாட்டின் எல்லாப் பிரிவினரும் பல்வேறு வகைகளில் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டிருந்தாலும், காங்கிரஸ் போன்ற கட்சிகள் காந்தியின் தலைமையில் பெரும்பகுதி மக்களைத் திரட்டி வழிநடத்திக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் அரசை வெளியேற்றுவது என்ற நோக்கம் மட்டுமே இவற்றில் பெரும்பான்மையான சக்திகளுக்கு இருந்தது. ஆனால் இந்தியச் சிக்கல்களான சாதி, வகுப்புவாதம், நிலவுடைமை உள்ளிட்டவற்றை ஒழிப்பதுடன் எதிர்கால அரசு சோசலிச அரசாக மலர வேண்டும் என்ற பெருங்கனவு பகத்சிங்குக்கு இருந்தது. அதனாலேயே காங்கிரஸ் போன்ற பெரிய காட்சிகளிலும், அன்றைய ஒரே கம்யூனிஸ்ட் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் கூட அவர் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. கிரிதி விவசாய கட்சி போன்ற இயக்கங்களுடன் தொடர்பேற்படுத்திக் கொண்ட பகத்சிங் பின்னாளில் ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு கழகம் என அறியப்பட்ட ஹிந்துஸ்தான் சோசலிச இராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
முதலாளித்துவத்தை ஒழித்து தொழிலாளர்களின் அதிகாரத்தை நிறுவும் சோசலிச அரசமைக்க புரட்சி ஒன்றே குறிக்கோள் எனப் பிரகடனப்படுத்திக் கொண்ட HRSA, அதற்கு படை அமைத்து அரசுடன் போரிட வேண்டும் என்ற நிலையையே மேற்கொண்டிருந்தது. இத்தகைய நிலைப்பாட்டிலிருந்தே லஜபதிராயின் மரணத்துக்குக் காரணமான ஜேம்ஸ் ஸ்காட் என்ற போலீஸ் கண்காணிப்பாளருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இதை நிறைவேற்றும் பொறுப்பை பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஏற்றுக்கொண்டனர். இந்நடவடிக்கையில் ஏற்பட்ட குழப்பதிலேயே துணை கண்காணிப்பாளர் சாண்டர்ஸ் கொல்லப்பட்டார். லாகூர் சதிவழக்கு புனையப்பட்டது. ஆசாத் முன்னரே ஏற்பட்ட போலீஸ் மோதல் ஒன்றில் இறந்துவிட மீதி மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.
இக்கொலை சம்பவத்தின் போது பகத்சிங் மற்றும் அவரது தோழர்களால் வீசப்பட்ட தூண்டறிக்கையில் உள்ள “இந்திய மக்கள் உயிரற்றுப் போய்விடவில்லை, அவர்களின் இரத்தம் குளிர்ந்து உறைந்து போய்விடவில்லை என்பதை இன்று இவ்வுலகம் கண்டுகொண்டது. இந்நாட்டின் மாண்புக்காக அவர்கள் தங்களது உயிரையும் தருவார்கள் என்பதையும் கண்டுகொண்டுள்ளது. ..ஒரு மனிதனின் உயிரைப் பறித்ததற்காக வருந்துகிறோம். ஆனால் இம்மனிதன் ஒரு கொடூரமான, இழிவான, அநீதியான அமைப்பின் அங்கமாக உள்ளார் என்பதனால் இவரைக் கொல்வதென்பது அத்தியாவசியமாகிறது. ..இவ்வரசங்கமே உலகின் மிக மோசமான ஒடுக்குமுறை அரசங்கமாக உள்ளது.” எனும் வாக்கியங்கள் பகத்சிங் அரசு குறித்தும், இந்திய விடுதலை குறித்தும் கொண்டிருந்த கண்ணோட்டத்தை தெட்டதெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
ஆயுதத்தை வழிபடுபவர்கள், கலகக்காரர்கள் எனத் தூற்றப்பட்ட பகத்சிங் மற்றும் தோழர்கள் தான் பின்னாளில் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசி கைதானார்கள். நீதிமன்றத்தைப் பிரச்சார மேடையாகப் பயன்படுத்தி இந்திய மக்களுக்குப் புரட்சிகர உணர்வூட்டவேண்டித் தாமே முன் வந்து கைதான பகத்சிங்கை தன் தரப்பு வாதங்களை முன்வைக்கக் கூட அனுமதிக்காமலும், சுமார் ஐநூறு சாட்சியங்களை விசாரிக்காமலும், விசாரிக்கப்பட்ட சாட்சிகளை புரட்சியாளர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்காமலும் ஒருதலைபட்சமாக மரண தண்டனை விதித்தது நீதிமன்றம். பகத்சிங் மற்றும் தோழர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கையற்றோர் என்று தூற்றிய ஜனநாயகவாதிகள் அகிம்சாமூர்த்திகள் எவரும் இந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து மூச்சுக்கூட விடவில்லை.
இந்திய வானில் தோன்றிய சிவப்பு நட்சத்திரமாம் பகத்சிங் இன்று சமூகத்தை நேசிக்கும் லட்சோப லட்சம் இளைஞர்களுக்கு ஆதர்சமாய்த் திகழ்கிறார். இருபத்து மூன்று வயதில் மரணத்தை தோற்கடித்த புரட்சியாளனை, உலகின் சூரியன் அஸ்தமிக்காப் பேரரசு கண்டு நடுங்கிய மாவீரனை, வெள்ளை ஏகாதிபத்தியத்தை பூச்செண்டால் வருடிக் கொடுத்துக் கொண்டிருந்த தீரர்களும், பாராளுமன்றத்தின் வழியாகவே புரட்சியை அள்ளிக்கொண்டு வந்து விடப்போகிற ‘புரட்சி’க்காரர்களும் உரிமை கோருவது தான் விந்தையிலும் விந்தை. மரணதண்டனையை இரத்து செய்ய வேண்டி அரசாங்கத்துக்குக் கடிதம் எழுதிய தந்தையைக் கடிந்து கொண்ட அந்த மாவீரனை, மன்னிப்புக் கடிதம் எழுதியே தேய்ந்துபோன சாவர்க்கர் வாரிசுகள் தங்கள் பதாகைகளிள் பொறித்துக் கொள்வது இந்நூற்றாண்டின் இணையற்ற நகைச்சுவை.
– இ.ராகேஷ்.