
உழைக்கும் மகளிர் தினமாக இன்றைய நாள் உலகம் முழுக்கக் கொண்டாடப் பட காரணம் பல உழைக்கும் வர்க்கப் பெண்களின் போராட்டமும், தியாகமும் தான். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் “சஃப்ரேஜ்” (வாக்களிக்கும் உரிமை) போராட்டத்தை 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முன்னெடுத்தனர் உழைக்கும் பெண்கள்.
1908ம் ஆண்டு 15000 பெண்கள் சம ஊதியம், வாக்குரிமை, குறைந்த பணி நேரம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பெரும் போராட்டத்தைத் தொடங்கினார்கள். 1909ம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவில் முதல் தேசிய மகளிர் தினத்தைக் கொண்டாடியது அமெரிக்க பொதுவுடைமைக் கட்சி. 1913ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமையை தேசிய மகளிர் தினமாக அமெரிக்க உழைக்கும் பெண்கள் கொண்டாடினார்கள்.
அமெரிக்க பெண்கள் இப்படிக் கொண்டாடிய தேசிய நாளை சர்வதேச கொண்டாட்டமாக மாற்றியவர் கிளாரா ஜெட்கின்! 1910ம் ஆண்டு கோப்பன்ஹேகன் நகரில் நடைபெற்ற உழைக்கும் பெண்கள் மாநாட்டில் ஜெர்மனியின் பொதுவுடைமை குடியரசுக் கட்சியின் ‘பெண்கள் அலுவலக’ தலைவரான கிளாரா, ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுக்க குறிப்பிட்ட நாளை பெண்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். 17 நாடுகளைச் சேர்ந்த 100 உழைக்கும் பெண்கள்- தொழிலாளர் சங்கப் பெண்கள், உழைக்கும் பெண்கள் கிளப்கள், பொதுவுடைமைக் கட்சி பெண் உறுப்பினர்கள், ஃபின்லாந்து நாட்டின் முதல் மூன்று பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று இந்த 100 பெண்களும் கிளாராவின் கோரிக்கையை வழிமொழிந்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக 1911ம் ஆண்டு ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் மார்ச் 19 அன்று மகளிர் தினம் முதல் முறையாகக் கொண்டாடப்பட்டது. ஒரு மில்லியன் உழைக்கும் பெண்கல் சம உரிமை கோரி அன்று இந்த நாடுகளில் ஊர்வலங்களும் கூட்டங்களும் நடத்தினார்கள். ஆனால் அதே மாதம் 25ம் தேதி நியூயார்க் நகர ஆலை ஒன்றில் நடந்த தீவிபத்தில் 140 உழைக்கும் பெண்கள் பலியானார்கள். அதன் பின் பெண்கள் ‘சஃப்ரேஜ்’ போராட்டம் இன்னும் அதிகமாக சூடு பிடித்தது. ‘பிரெட் அண்டு ரோசஸ்’ போராட்டம் என்று பெயரிடப்பட்ட போராட்டம் பெண்களுக்கு பொருளாதார தற்சார்பையும், பண்பாட்டு விடுதலையும் பெற தொடங்கப்பட்டது.
1913ம் ஆண்டு ரஷ்ய நாட்டுப் பெண்கள் தங்கள் முதல் பெண்கள் தினத்தை பிப்ரவரி 23 அன்று கொண்டாடினார்கள். அதன் பின் ரஷ்யா அப்போது கடைபிடித்து வந்த ஜூலியன் காலண்டரின் பிப்ரவரி 23- கிரகோரியன் காலண்டர் படி மார்ச் 8 அன்று மகளிர் தினத்தைக் கொண்டாடுவது என்று முடிவானது. 1917ம் ஆண்டு 2 மில்லியன் ரஷ்யப் போர் வீரர்கள் முதலாம் உலகப் போரில் மாண்டதை எதிர்த்து ‘ரொட்டியும் அமைதியும்’ போராட்டத்தை ரஷ்யப் பெண்கள் அந்த ஆண்டின் பிப்ரவரி கடைசி ஞாயிறு அன்றுத் தொடங்கினார்கள். நான்கு நாள்கள் நடைபெற்ற பெண்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக சார் மன்னன் பதவியிறங்கி, பெண்களுக்கு வாக்குரிமையும் தர சம்மதித்தான். ரஷ்யாவின் ஜூலியன் காலண்டர் பிப்ரவரி 23 அன்று இந்தப் போராட்டம் தொடங்கியது; பிறருக்கு அது கிரகோரியன் காலண்டர் மார்ச் 8! இதனைத் தொடர்ந்தே ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் மார்ச் 8 அன்று கொண்டாடப்பட்டு வந்தது. 1910ம் ஆண்டு தொடங்கிய இந்த கொண்டாட்டத்தை ஐ.நா. அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள 65 ஆண்டுகள் பிடித்தது!
1975ம் ஆண்டு முதல் சர்வதேச மகளிர் தினத்தை ஐ.நா. கொண்டாடியது. 1977ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒவ்வொரு நாடும் பெண்கள் உரிமை மற்றும் உலக அமைதிக்கான நாளை கொண்டாடவேண்டும் என்று வலியுறுத்தியது. 1996ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மகளிர் தினத்துக்கும் ஐ.நா. ‘தீம்’ ஒன்றை வழங்கத் தொடங்கியது. 2000ம் ஆண்டு வரை மகளிர் தினம் பெரிதாக உலகில் கொண்டாடப்படவில்லை என்றே சொல்லலாம்.
அதன்பின் வந்த பொருளாதார வீக்கம், கார்ப்பரேட் பண்பாடு மகளிர் தினத்தை- உழைக்கும் பெண்களுக்கான நாளை ‘வணிகப் பொருளாக’ மாற்றத் தொடங்கியது. ரோஜாக்களும், சாக்லெட்களும் மகளிர் தினக் கொண்டாட்டங்களில் இடம்பிடித்தன. யூனிஃபார்மாக சேலை கட்டுவது, கோலப் போட்டி, கவிதைப் போட்டி, சமையலில் கெட்டி மாமியாரா மருமகளா டைப் பட்டிமன்றங்கள் உழைக்கும் பெண்களிக் போராட்ட குணத்தை மழுங்கடித்தன. இன்று சக ஆண்கள் பெண்களை அம்மா, மனைவி, காதலி, மகள், தோழி என்று வார்த்தைப் பந்தலிட்டு சோடிக்கும் ஒரு ‘விழாவாக’ உழைக்கும் மகளிர் தினம் மாறி நிற்பது பெரும் சோகம்.
தனக்கான உரிமையை போராடிப் பெறும், தன் இடம் சமூகத்தில் எல்லா களத்திலும் உண்டு என்று விடாமல் சமர் செய்யும், குடும்ப அமைப்பு ‘அன்பால்’ கட்டும் சங்கிலிகளை உடைத்துப் பறக்கும் பெண்கள் அனைவருக்கும், வாய் வார்த்தையாக இல்லாமல் உண்மையில் பெண்களுடன் தோள் கொடுக்கும் நேசமிகு ஆண்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள். தொடர்ந்து சமர் செய்வோம். சம உரிமையை வெல்வோம்!
-ஹெர் ஸ்டோரிஸ்