கொரோனா லாக்டவுன் மற்றும் அதற்கு பிறகான காலங்களில் உலக முழுவதும் வளர்ச்சி நிலையில் சென்ற தகவல் தொழிநுட்ப நிறுவனங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாகின. புதுப்புது தொழில் நுட்பங்கள் வருகை, போட்டி நிறுவனங்கள் உருவாகுதல் போன்ற நிகழ்வுகள் பன்னாட்டு நிறுவனஙங்களிடையே போட்டியை அதிகப்படுத்தியுள்ளது.
ஒரு நிறுவனம் தொடர்ந்து சந்தையில் இருப்பதற்கு நிபந்தனை அதன் உற்பத்தி செலவுகளை குறைப்பது மற்றும் புதிய தொழிநுட்பங்களை செயல்படுத்துவது .ஒவ்வொரு நிறுவனமும் அதன் போட்டி நிறுவனத்தை வீழ்த்த அல்லது போட்டியில் நீடிக்க இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் . இது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். நாம் வாழும் இந்த முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி நடைமுறையில் இதை பல துறைகளில் காணலாம். தற்போது இந்த நடவடிக்கை தகவல் தொழில்நுட்ப துறையில் தீவிரம் அடைந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்பிச்சை தனது நிறுவனத்தின் ஊழியர்கள் 12,000 பேரை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார். சுந்தர் பிச்சை இந்தியர், தமிழர் என மக்கள் கொண்டாடலாம். ஆனால் அவர் முதலாளித்துவ அடியாள் .முதலாளித்துவத்திற்கு லாபம் ,அதிக லாபம் இது கூடிகொண்டே செல்ல வேண்டும் என்பது மட்டும் அதன் நோக்கமாக இருக்கும்.
அமேசான் நிறுவனம் 18,000 , மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 தொழிலாளர்களை நீக்கியது.
கடந்த ஆண்டு டிவிட்டர் நிறுவனம் 3000 தொழிலாளர்களை நீக்கியது. இது விப்ரோ, நெட்பிளக்ஸ், Spotify, ), என இதன் பட்டியலில் நீண்டுகொண்ட செல்கிறது.
இந்தியா போன்ற நாடுகளில் குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் கிடைக்கின்றனர். ஏற்கனவே முதலாளித்துவ கல்வி அதிக அளவில் தொழிலாளர்களை உற்பத்தி செய்து வைத்திருக்கிறது. “நல்லா படிச்சு நல்லா சம்பாதிக்கனும்” என்ற எண்ணத்தை உருவாக்கி அவர்களை ஏக்கத்துடன் இருத்தி வைத்துள்ளது.
இது மேலும் உதிரி பாட்டாளி வர்க்கங்களை உருவாக்கி கொண்டே செல்கிறது. இந்த உதிரி பாட்டாளி வர்க்கங்கள் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்களாக மிகப்பெரிய அளவில் உள்ளனர் . இவர்கள் மிகவும் குறைந்த கூலிக்கு வேலைபார்க்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது அமைப்பாக்கபட்ட நிரந்தர தொழிலாளர்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. இன்றைய சூழலில் நிரந்தர தொழிலாளர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ள நிலையில் சிதறி கிடக்கும் தொழிற்சங்க அமைப்புகள் , தொழிலாளர் சட்ட திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் முதலாளிகள் தங்களது லாபங்களை அதிகப்படுத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையை கணிசமாக குறைத்து வருகின்றனர்.
சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப தொழிலாளர்களின் கூலியும் மாற்றங்களை சந்திக்கிறது. எந்தவித முன் அறிவிப்பும் இல்லாத வேலை நீக்கங்கள் தகவல் தொழிநுட்ப துறைகளுக்கு புதிதல்ல. மேலும் தொழிலாளர்கள் துணிவாக போராட முன்வருவதில்லை. தகவல்தொழில்நுட்பத் துறையில் குறைந்த அளவு தொழிலாளர்களே தொழிற்சங்க உரிமைகளுக்காக போராடி வருகின்றனர்.
இது அடுத்தடுத்து மற்ற எந்தெந்த துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கவனத்தில் கொண்டு தொழிலாளர்கள் தங்களை அமைப்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பலப்படுத்தி கொள்ள வேண்டும் . இந்த முரண்பாடுகள் முற்றும் போது முதலாளித்துவ அமைப்புகளும் நெருக்கடிகளை சந்திக்கும் என்பது இயங்கியல் விதி. அதை எதிர்கொள்ள தொழிலாளர் மக்கள் திரள் அமைப்புகள் நம்மிடையே வலுவாக உள்ளாதா என சிந்திக்க வேண்டும்.
“உலகம் முழுவதும் முதலாளித்துவ அமைப்பு வெற்றி பெற்ற விட்டது ஆனால் இந்த வெற்றி முதலாளித்துவத்தின் மீது தொழிலாளர் காணப் போகும் வெற்றியின் முன்னறிவிப்பே” ஆகும் என
லெனின் தெளிவாக வரையறுத்துள்ளார்.
அசுரபலம் கொண்ட நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் இருந்து தொழிலாளர்களை நீக்கும்போது பெரும்திரளான தொழிற்சங்க அமைப்பு இருந்தால் மட்டுமே நாம் எதிர்த்து நின்று வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. ஆகையால் அமைப்பாகுங்கள். பெருநிறுவனங்களின் அடாவடி நடவடிக்கையை எதிர்த்து போராட அணியமாகுங்கள். போராடாமலே உங்கள் தோல்வியை ஒத்துக்கொள்ளாதீர்கள்.தொழிலாளர்களை அமைப்பாவதற்கும் அதற்கு தடையாக இருக்கும் சமூக காரணிகளையும் புரிந்து கொண்டு அரசியல் விழிப்புனர்வு தொழிலாளர்களை அணியமாக்கும் முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.அதுவே இப்போதய தொழிலாளர்களுக்கு முக்கிய தேவையாக இருக்கிறது .