. ஜனவரி 8 கோவை வரலாற்றில் முக்கியமானநாள்.இந்த நகரம் அதிர்ந்த அந்த நேரத்தை இன்னும் ஓரிரு மணி நேரத்தில் தொட இருக்கிறோம்.
இங்கே பஞ்சாலைகள்கொடிகட்டிப்பறந்த காலம் ஒன்று இருந்தது அப்படிப் புகழ் பெற்ற பஞ்சாலைகளில் ஒன்று ரங்கவிலாஸ் மில்
1911ல் ல் ஜின்னிங் பேக்டரியாக தொடங்கப்பட்ட ரங்கவிலாஸ் 1922ல் நூற்பாலையாக மாறுகிறது
ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் நால்வரும் இந்த மில்லின் துடிப்பும் துணிவும்மிக்க இளம் தொழிலாளிகள் . சின்னியம்பாளையத்துக்காரர்கள்.15 மணி நேரம் உழைப்புக்கு .. மாத சம்பளம் 15 ரூபாய்.
பஞ்சாலை பாதுகாவலர்கள் சங்கம் என்ற பெயரில்ஆலை முதலாளிகள் வைத்திருந்த ரவுடிகளின் அட்டகாசங்கள் . பெண் தொழிலாளிகளுக்கு பாலியல் சீண்டல்கள், சவுக்கடி, துப்பாக்கிசூடு…
இவற்றையெல்லாம் தட்டிக்கேட்டு எதிர்த்து சங்கம் கட்டி, துப்பாக்கிகளுக்கு அஞ்சிடாமல் பல்வேறு போராட்டங்களை நெஞ்சுரத்தோடு நடத்தினார்கள் தொழிலாளிகள்.ராஜி,இதில் மிகமுக்கியமான பெண் போராளி..
பஞ்சாலைக்குள் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக, தனிப்பட்டமுறையில் பெண்களை திரட்டி துணிச்சலோடு அவ்வப்போது மேஸ்த்திரிகளை பொடையெடுத்துக்கொண்டிருந்தவர்
1940களின் பிற்பகுதியில் ஒரு நாள்
கும்மிருட்டு தொடங்கும் நேரம் …..
ரங்கவிலாஸ் மில்லிலிருந்து வேலைமுடிந்து ராஜி திருப்பிக்கொண்டிருக்கிறாள். கூட வந்த பெண்கள் தங்கள் ஊருக்கு செல்லும் பாதையில் திரும்பியாயிற்று. சாலை வெரிச்சோடிவிட்டது.. குதிரைவண்டி ஒன்று அவளுக்கு குறுக்கே வந்து நிற்கிறது நான்கைந்து உருவங்கள் அதிலிருந்து சடாரென குதிக்கிறது . சுதாகரித்து நிறப்பதற்குள் கைகளும் வாயும் கட்டப்பட்டுகிறது போராடிச்சோர்ந்துவிட்ட ராஜியை அரசூருக்கு அருகில் ஒரு சோளக்காட்டுக்கு கொண்டுசெல்கிறார்கள். அங்கே ராஜி கூட்டுபலத்தகாரம் செய்யப்பட்டு குற்றுயிராக்கப்படுகிறாள்
சின்னியம்பாளையத்துக்கு எப்படியோ இந்த தகவல் போய் சேர்ந்துவிடுகிறது. ஆவேசமுற்ற .அந்த நான்குஇளம் தொழிலாளிகளும் பொன்னானை தேடிப்பிடித்து அடித்துத்துவைத்து நொங்கெடுக்கிறார்கள் சோர்ந்து சாய்ந்த பொன்னானை பாதிக்கப்பட்ட பெண்கள் விடவில்லை சூழ்ந்துகொண்டு ஆத்திரம் தீரும்மட்டும் புரட்டியெடுக்கிறார்கள்.
இறுதியில் பொன்னான் இறந்துபோகிறான்
தங்கள் மில்லில் உரிமைகேட்டு போராடிக்கொண்டிருந்த, மற்ற மில் தொழிலாளிகளுக்கு ஆதர்ச சக்தியாக இருந்த இந்த துடிப்புமிக்கதொழிலாலிகளை எப்படியாவது பழிவாங்கவேண்டுமென்று காத்திருந்த மில் நிர்வாகம், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்கிறது சிங்காநல்லூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சாந்தபிள்ளையை உரிய மரியாதையோடு அழைத்து பேசுகிறது. நால்வரின் மீது வழக்கு பாய கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்
வழக்கு விசாரணைக்கு வருகிறது . ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் அணி திரண்டு வந்து நீதிமன்றத்தை ஸ்தம்பிக்கவைக்கிறார்கள் . கம்யூனிஸ்ட் கட்சியும், தொழிற்சங்கமும் புகழ்பெற்ற பல வழக்கறிஞர்களை வைத்து நால்வரையும் விடுவிக்க கடுமையாகப் போராடுகிறது
வழக்கு, கோவையைத்தாண்டி , சென்னையைதாண்டி , டில்லி யைத்தாண்டி லண்டன் கவுன்சில் முடிவுக்கு போகிறது .
அங்கேயும் கம்யூனிஸ்ட் கட்சி
இங்கிலாந்தைச் சார்ந்த உலகப் புகழ் பெற்ற வழக்கறிஞர் பிரிட்டை வைத்து வாதாடிப்பார்க்கிறது ஆனால்
உழைக்கும் மக்களின் உரிமைக்காக போராடிய, பெண் தொழிலாளிகள் மீது இழைக்கப்பட்ட பாலியல் வன்முறைக்கு எதிராக போராடிய சின்னியம்பாளையம் தொழிலாளிகளுக்கு தூக்குதண்டனையை தீர்ப்பாக அறிவிக்கிறது லண்டன் கவுன்சில் மில்தொழிலாளிகளின் கதறலும் கண்ணீரும் கோவையை மூழ்கடிக்கிறது
கொந்தளிப்பான சூழ்நிலையில் நான்கு தோழர்களையும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பி சி ஜோஸி மற்றும் பி ராமமூர்த்தி, கே ரமணி ஆகிய தலைவர்கள் சிறைக்குள் சென்று சந்திக்கிறார்கள்
உணர்வைக்கட்டுப்படுத்தமுடியாமல் தலைவர்கள் கலங்குகிறார்கள் ,”வழிகாட்டும் நீங்கள் கண்ணீர் சிந்தக்கூடாது ‘இன்குலாப் ஜிந்தாபாத்! லால் சலாம்! என்று சிறையதிர முழங்கி அவர்களை தேற்றி அனுப்புகிறார்கள்
1946-ம்ஆண்டு ஜனவரி 8-ம் தேதி அதிகாலை
சிறை நிர்வாகம் தூக்கிலிட ஆயத்தப்பணிகளை செய்யத்தொடங்குகிறது அச்சமோ கலக்கமோ ஏதுமின்றி அந்த நாளை நால்வரும் எதிர்கொண்டார்கள்
நிர்வாகம் அவர்களை அழைத்துவந்து தூக்கு மரத்தின் முன்பு நிறுத்தியது சரியாக 5 மணிக்கு ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் நால்வரும்தூக்கிலிடப்பட்டனர். இன்குலாப் ஜிந்தாபாத் என்னும் முழக்கம் கலவையாகி எழுந்து அடங்கியது
கொந்தளித்து எழுந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளின்பிரம்மாண்டஅணிவகுப்போடு சின்னியம்பாளையத்தில் அவர்களின் கடைசி ஆசையின்படி ஒரே சமாதியில் புதைக்கப்பட்டனர்
இன்னும் அந்த சமாதி அங்கேதான் இருக்கிறது. நகரத்திலிருந்து எட்டிவிடும்தூரம்தான்.
-Lakshmanasamy Rangasamy