நிலவுடைமை பிரபுத்துவத்தை ஒழித்துக்கட்டி, முதலாளித்துவம் அரும்பிய காலத்தில் இருந்து தொழிலாளர்களை பிளவுபடுத்தி, அவர்கள் ஒன்று சேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வதில் முதலாளி வர்க்கம் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறது. அதற்கு ஒவ்வொரு நிறுவனத்திலும் இருக்கும் நிர்வாகத்துறை, மனித வளத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி தொழிலாளர்களை ஒன்று சேராமல் பிளவுபடுத்தி வைத்திருப்பதே அவர்களின் சுரண்டலுக்கு வசதியாகவும், லாபங்களுக்கான அடிப்படையாகவும் இருக்கிறது.
தொழிலாளர்களுக்குள் ஏற்படும் பிரிவினையை பயன்படுத்தி முதலாளிகள் மிகப்பெரிய லாபங்களை ஈட்டிக்கொண்டிருக்கின்றனர். நம் உழைப்பிற்கான அடிப்படை சம்பளத்தை பெறவும், நம் உரிமைகளை மீட்டெடுக்கவும் அவை பறிபோகாமல் தடுக்கவும் நமக்கான சங்கங்களை நாம் தோற்றுவிப்பதற்கு, சில நூற்றாண்டுகள் நாம் போராட வேண்டியதாயிற்று. அதன் பிறகே தொழிலாளர் சங்கங்களை நம்மால் உருவாக்க முடிந்தது. தொழிலாளர்களின் திரட்சி நமது சங்கங்களை அவர்கள் அங்கீகரிக்கும்படி செய்தது. ஆனால் தொழிலாளர்களுக்கு மத்தியில் இருக்கும் ஒரு சில குறுகிய எண்ணங்களையும், ஆசைகளையும் தூண்டிவிட்டு அவர்களை மூளைச்சலவை செய்து, தொழிலாளர்களையே தொழிலாளர்களின் எதிரிகளாக மாற்றி தொழிற்சங்கங்களை பிரித்து முதலாளிகளுக்கும், அவர்களின் சட்ட திட்டங்களுக்கும் ஏற்றார்போல ஓர் அமைப்பு குழுவை அவர்களே உருவாக்கி அல்லது அவர்களின் சொல்படி நடக்கும் கைப்பாவையாக தொழிலாளர்களை மாற்றி ஒரு சங்கத்தை உருவாக்கி கொள்கின்றனர்.
இதன் மூலம் தொழிலாளர்களுக்கான, அவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கான, தொழிற்சங்கம் அமைவதை, தடுப்பதை தன் தலையாய கடமையாக முதலாளிகள் மேற்கொண்டுள்ளனர்.தொழிற்சங்கங்கள் இருந்தால்தானே, தொழிலாளர்களுக்கு எதிரான சுரண்டல்களை எதிர்ப்பார்கள் தொழிற்சங்கங்களை இல்லாமலாக்கிவிட்டால், தங்கள் சுரண்டலுக்கு எந்த இடையூறும் இருக்காது என்பதற்காக அவர்கள் மேற்கொள்ளும் முதல் வேலை தொழிற்சங்கங்களையும், தொழிலாளர்களையும் சூழ்ச்சியின் மூலம் உடைப்பது, பிரிப்பது……
தொழிலாளர்களை பிரிப்பதற்காக நிர்வாகம் மேற்கொள்ளும் தந்திரங்கள்:-
பெரும்பான்மை தொழிற்சங்கங்களை அங்கீகரிக்காதது ,ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் தொழிற்சங்கத்தை நிர்வாகம் என்றும் அங்கீகரிப்பதில்லை. அந்த தொழிற்சாலையில் உள்ள சிறுபான்மை தொழிலாளர்களை அது அங்கீகரிக்கிறது இது தொழிலாளர்களுக்கிடையே பிரிவினையையும், சலசலப்பையும் ஏற்படுத்துவதற்கு முதலாளிகளின் ஒரு முக்கிய தந்திரமாக இருக்கிறது.பெரும்பான்மை தொழிற்சங்கத்தையும் சிறுபான்மை தொழிற்சங்கத்தை ஒன்று சேர விடாமல் சிறுபான்மை தொழிலாளர்களுக்கு மட்டும் மிகவும் சொற்பமான ஒரு சில சலுகைகளை வழங்கி, அதன்மூலம் பெரும்பான்மை தொழிலாளர்கள் தொழிலாளர்களை பிளவுபடுத்த ஒரு ஆயுதமாக இதை கையாளுகிறார்கள். சிறுபான்மை தொழிலாளர்களின் மன நிலைமையும் எதுவும் கிடைக்காததற்கு இது எவ்வளவோ மேல் என்ற ஒரு நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.
தொழிலாளர்கள் மத்தியில் சலசலப்புகள் ஏற்படுத்துதல்:-
தொழிற்சங்கங்களை பற்றியும் தொழிலாளர்களின் தலைமைகளை பற்றியும் ஒரு சில தவறான வதந்திகளையும், தகவல்களையும் பரப்புவதன் மூலம் தொழிலாளர்களின் மத்தியில் ஏற்படும் சலசலப்புகளையும் அவர்களுக்குள்ளேயே ஏற்படும் சண்டைகளையும் வைத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளை மறக்கடித்து, நிர்வாகமும் முதலாளிகளிகளும் தங்களின் வேலைகளையும், சுரண்டல்களையும் எந்த தங்கு தடையும் இன்றி சுலபமாக நடத்திக் கொள்கின்றனர். நாமும் இந்த புரிதல் இல்லாமல் நமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டு இருக்கின்றோம்.
தொழிலாளர்களை பயத்தின் அடிப்படையில் பிரித்தல்:
தொழிற்சங்கங்களில் சேருபவர்களை மிரட்டுவது, வேலைப்பளுவால் அவர்களை துன்புறுத்துவது, பொய்யான தகவலின் பெயரில் பணியிடை நீக்கம் செய்வது, நீண்ட தொலைவான பகுதிகளுக்கு பணி மாற்றம் செய்வது போன்றும் தொழிற்சங்கத்தில் சேருபவர்களுக்கு அடிப்படை சலுகைகளை கூட வழங்க மறுப்பது போன்றும் தங்களின் அடிப்படை சம்பளத்தை, ஊதிய உயர்வை சட்டப்படி பெற்றுக் கொள்ளுங்கள் என மிரட்டுவது, தொழிற்சங்க முன்னணி களப்போராளிகளை தண்டனைக்கு உட்படுத்துவது என பல்வேறு அதிகாரதுஷ்பிரயோகங்கள் மூலம், மற்ற தொழிலாளர்களின் மன நிலைமையை மாற்றுவது, தொழிலாளர்களின் குடும்பம் மற்றும் பொருளாதார அடிப்படையில் அவர்களை பயமுறுத்தி அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துவது என பலவேறு தந்திரங்களை பயன்படுத்துகின்றனர்.
தொழிலாளர்களை பிளவுபடுத்த நினைக்கும் நிர்வாகத்தையும் முதலாளி வர்க்கத்தையும் சாதாரணமாக நம்மால் எதிர்த்துவிட முடியாது. பிரிக்க நினைத்தாலும் பிரியாமல் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக போராடுவதன் மூலம் மட்டுமே முதலாளி வர்க்கத்தையும் நம் அடிமை சங்கிலியையும் நம்மால் உடைத்தெறிய முடியும்.
தொழிற்சங்கங்களை கட்டமைப்பதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களுக்கான விடியல் பிறக்கும், தொழிலாளர்களின் தங்கள்மீது திணிக்கப்படும் சுரண்டலை உணர்ந்துக் கொண்டால் மட்டுமே தொழிலாளர்களுக்கிடையே ஒரு ஐக்கியத்தை நம்மால் உருவாக்க முடியும். முதலாளிகள் அஞ்சுவதும், பணிவதும் தொழிலாளர்களின் ஒற்றுமைக்கும், தொழிற்சங்கங்களின் வலிமைக்கும் மட்டுமே.
ஆகையால், தொழிலாளர்களே முதலாளிகளின், நிர்வாகத்தின் தந்திரங்களை புரிந்துக் கொள்ளுங்கள். நாம் கோடிக்கணக்கான தொழிலாளர் சமுகத்தின் அங்கமென்றும், அது வளர்வதிலும், வீழ்வதிலும் நாம் ஒவ்வொருவரும் பங்காற்றுகிறோம் எனவும் புரிந்துக்கொண்டுவிட்டால், நம்மை பிளவுபடுத்துவதற்கும், வீழ்த்துவதற்கும் யாராலும் இயலாது.
தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக !தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக.!