ஆசிரியர் தோழர் குமணன் எழுதிய இப்புத்தகம் பல்வேறு தொழிற்சங்கங்களின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது
இந்த வெளியீடு புதிய தொழிலாளர் சட்டங்களில் அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்தவில்லை. மாறாக அவற்றின் பாதகமான சில முக்கிய அம்சங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதனால் ஏற்படும் போகும் பாதிப்புகளைத் தொழிலாளி வர்க்கத்திற்கு கொண்டு சேர்க்கவே இது வெளியிடப்பட்டுள்ளது. அதன் சுருக்கமான அம்சங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடைமுறையில் இருந்துவந்த தொழிலாளர் சட்டங்கள் சில காலனிய பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் சில இந்திய விடுதலைக்குப் பிறகும் இயற்றப்பட்டவை. இவற்றில் அவ்வப்போது திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டு வந்துள்ளன.
1991 இல் தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகளை அமல்படுத்தப்பட்ட பிறகு எவ்வித வரைமுறையும் என்ற சுரண்டலை அதிகரித்து லாபம் ஈட்டும் வகையில் தொழிலாளர் சட்டங்களை மாற்ற வேண்டிய அவசியம் ஆளும் முதலாளி வர்க்கத்திற்கு ஏற்பட்டது.
இந்நிலையில் தொழிலாளர்களைக் கடுமையாகச் சுரண்டவும் தொழிலாளர்களுக்கு இருந்து வந்த குறைந்தபட்ச சட்ட பலன்களையும் இல்லாமல் செய்து தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குவதற்காக இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் பழைய தொழிலாளர் சட்டங்களில் எவையெல்லாம் முதலாளிகளின் சுரண்டலுக்குத் தடைக்கற்களாக இருந்தனவோ அவையெல்லாம் நீக்கப்பட்டு தொழிலாளர்களின் உழைப்பை மேலும் அதிக அளவில் சுரண்டுவதற்காக புதிய வழிமுறைகளையும் சட்ட வாய்ப்புகளையும் இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
பழைய சட்டங்களில் தொழிலாளர்களுக்குப் பாதகமாக இருந்த எவற்றையும் திருத்தவோ அல்லது நீக்கமோ செய்யாமல் மேலும் பாதகமான அம்சங்கள் இந்த புதிய சட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் தொழிலாளி வர்க்கம் தன் மீதான ஒடுக்கு முறைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு இருந்து வந்த ஜனநாயக உரிமைகளும் இந்த புதிய சட்டங்கள் மூலம் பறிக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளையும் தொழிலாளர் சட்டத்தில் இருக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களையும் ஒரேயடியாக இல்லாமல் செய்ய முதலாளி வர்க்கம் எடுத்த ஆயுதம் தான் தொழிலாளர் சட்டங்களை எளிமைப் படுத்துதல் என்ற பெயரில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள்.
தொழிலாளர் சட்டங்களைச் சீரமைப்பு செய்ய இரண்டாம் தேசிய தொழிலாளர் ஆணையம் ரவீந்திர வர்மா என்பவர் தலைமையில் 1999 அக்டோபர் அன்று அன்றைய பாஜகவின் வாஜ்பாய் அரசினால் அமைக்கப்பட்டது. இந்த குழுவானது தன்னுடைய அறிக்கையை 2002 ஜூன் அன்று வாஜ்பாய் அரசிடம் அளித்தது. புதிய தொழிலாளர் சட்டங்களை வடிவமைக்கும் பணி இரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையம் கொடுத்த அறிக்கையின் பின்பே தொடங்கியது.
ஆனாலும் அதன் பின்பு வந்த காங்கிரஸ் அரசு தன்னுடைய பலம் குறைந்த தன்மையாலும், தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு அஞ்சியும் அதிலிருந்து சற்று பின்வாங்கியது. அதற்கு அடுத்து முதலாளிகளுக்குச் சாதகமான பாஜக அரசு ஆட்சியைப் பிடித்ததும் புதிய தொழிலாளர் சட்டங்களை இயற்றும் பணியைத் தீவிரப்படுத்தியது.
முதலாளித்துவத்தின் பாய்ச்சலுக்கு ஏற்ப அதற்குத் தேவையான சட்டங்களை உதாரணமாகச் சுற்றுச்சூழல் திருத்த மசோதா, புதிய கல்விக் கொள்கை, குடிமக்கள் திருத்தப் பதிவேடு, புதிய வேளாண் சட்டங்கள் போன்றவற்றைத் தனது சர்வாதிகார ஆட்சியில் நிறைவேற்றியது.
பின்பு இரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் மோடி தலைமையிலான இந்திய அரசு 29 தொழிலாளர் சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக மாற்றி அமைத்தது.
உலக வங்கி வெளியிட்டுள்ள தொழிலை எளிதாக நடத்துவதற்கான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 63 ஆவது இடத்தில் உள்ளது. ஆக தொழிலை இலகுவாக நடத்துவதற்கு ஏதுவாக புதிய தொழிலாளர் சட்டங்களைக் கொண்டு வருவதாக அரசு கூறினாலும் அதன் நோக்கம் என்பது தொழிலாளர்களைக் கடுமையாகச் சுரண்டுவது தான். தொழிலை எளிதாக நடத்துவது என்பதே எவ்வித எதிர்ப்பும் குறுக்கீடும் இல்லாமல் தொழிலாளர்களின் உழைப்பைக் கடுமையாகச் சுரண்டி லாபங்களைக் குவிப்பதுதான்.
தொழிலாளர்களோ தொழிற்சங்கமோ தங்களின் உரிமைகளுக்காக நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடுவதைக் கூட தடுப்பதும் அதற்கான சட்ட வாய்ப்புகளைக் கூட இல்லாமல் செய்வதுதான் இந்த புதிய சட்டத் தொகுப்பின் நோக்கம் ஆகும். தொழிலாளர் துறை பொது பட்டியலில் உள்ளதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டும் சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம். ஆனால் மாநில அரசுகள் சட்டங்களை இயற்றி மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பின்னரே அதனைச் செயல்படுத்த முடியும்.
இந்தியா முழுவதும் தொழிலாளருக்கு எதிரான சட்டங்களை ஒரே நேரத்தில் கொண்டு வரும்பொழுது அதை நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்புகளையும் போராட்டங்களையும் ஏற்படுத்தும் என்பதால் இந்த சட்ட தொகுப்புகளில் உள்ளவற்றை பாஜக ஆளும் மாநிலங்களில் பகுதி பகுதியாக அமல்படுத்தி வருகின்றனர்.
ஒரு நிறுவனத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 6 இலிருந்து 7 ஆக மாறினால் தொழிற்சங்கச் சட்டம் உள்ளே வருகிறது. 9 இலிருந்து 10 ஆக மாறினால் தொழிற்சாலை சட்டம் உள்ளே வருகிறது. 19 லிருந்து 20 ஆகவும் 49 லிருந்து 50 ஆகவும் 99 இலிருந்து 100 ஆகவும் மாறும் பொழுது வெவ்வேறு சட்டங்கள் அந்த நிறுவனத்திற்கு நுழைகிறது. இதில் முக்கியமானது தொழில் தகராறு சட்டம் தான். இந்த சட்டத்தின்படி உற்பத்தி ஆலையில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்தால் அரசிடம் முன் அனுமதி பெறாமல் அவர்களில் எவரையும் எந்த சூழ்நிலையிலும் நிறுவனங்களால் வேலை நீக்கம் செய்ய முடியாது. இந்த பெயரளவிலான சட்டங்களை கூட இல்லாமல் ஆக்குகிறது இந்த புதிய தொழிலாளர் சட்ட.
முதலாளிகளின் சட்ட விரோத போக்கை எதிர்த்து தொழிலாளர் துறை அதிகாரிகள், தீர்ப்பாயங்கள், தொழிலாளர் நீதிமன்றங்கள், உயர் – உச்ச நீதிமன்றங்கள் என எங்குப் போனாலும் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. முதலாளிகளை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்துவது என்பதே தொழிலாளர்களுக்குத் தண்டனையாக உள்ளது. ஏனெனில் எந்த அரசுத் துறைகளிலும் வழக்குகள் குறுகிய காலத்தில் முடிக்கப் படுவதில்லை. அவை நீண்ட நெடிய போராட்டமாகத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்நாளை ஒதுக்க வேண்டிய போராட்டமாக உள்ளது.
சட்ட போராட்டங்களில் பெரும்பாலும் தொழிலாளர்களுக்கு எதிரான தீர்ப்புகளே வருகின்றன. இறுதிக்கட்டம் வரை சட்டப் போராட்டங்களை நடத்த வலுவின்றி தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் தங்களுடைய சட்டப் போராட்டத்தைப் பாதியிலேயே கைவிட வேண்டிய நிலையே உள்ளது. விதிவிலக்காகச் சட்ட போராட்டங்களில் தொழிலாளர்கள் வெற்றி பெற்றாலும் அந்த தீர்ப்பை எந்த முதலாளியும் செயல்படுத்துவது இல்லை. அரசின் உத்தரவை அமல்படுத்தாத காரணத்திற்காக எந்த முதலாளியும் தண்டிக்கப்படுவதில்லை. எனவே சட்ட ரீதியாகப் போராடி தங்கள் உரிமையை நிலைநாட்டுவது என்பது தொழிலாளி வர்க்கத்திற்குக் கானல் நீராகவே உள்ளது.சில விதிவிலக்குகளைத் தவிர.
மேலும் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காகத் தொழிலாளர்கள் சட்டப்படியான உரிமையான வேலை நிறுத்தம் அல்லது வெகுஜனப் போராட்டங்களைக் கட்டியமைத்தாலும் ஆளும் கிராம நிர்வாக அலுவலர் முதல் காவல்துறை, வட்டாட்சியர், தொழிலாளர் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், நீதிமன்றங்கள் வரை அனைத்து தரப்பிலும் மிரட்டல்களும் தொழிலாளர்களுக்கு எதிரான போக்குகளுமே வெளிப்படுகின்றன. இதனையும் மீறி தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது காவல்துறையைக் கொண்டும் குண்டர்களைக் கொண்டும் கடுமையான ஒடுக்குமுறைகள் செலுத்தப்படுகிறது.
ஊதிய திருத்தச் சட்டம் :
தொழிலாளர் துறை அமைச்சகம் பரிந்துரைத்த ஒருநாள் குறைந்தபட்ச ஊதியம் 325 ரூபாய். ஒன்றிய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்த ஒரு நாளைக்கான குறைந்தபட்ச ஊதியம் 600 ரூபாய் அல்லது மாதம் ஒன்றிற்கு 18000 ரூபாய். ஆனால் இந்த இரண்டு பரிந்துரைகளையும் புறந்தள்ளிவிட்டு தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியமாக 178 ரூபாய் ஊதிய சட்டம் நிறைவேற்றும்போது அரசு நிர்ணயித்தது. ஒரு நாளைக்கு 178 ரூபாய் அதாவது மாதத்திற்கு 4628 ரூபாய் மட்டுமே பெறும் ஒரு தொழிலாளி மாத வீட்டு வாடகை, கல்வி, மருத்துவச் செலவு, உணவு உடை செலவு, மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவு ஆகியவற்றை எப்படிச் சமாளிப்பார்.
குறைந்தபட்ச ஊதியத்தை ஆண்டிற்கு ஒரு முறை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மறு நிர்ணயம் செய்ய முடியும் என்று ஊதிய சட்டம் கூறியுள்ளது. இந்த 5 ஆண்டுகளில் எந்த அளவிற்கு விலைவாசி உயர்ந்தாலும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயராது. மேலும் வேலை நேரத்தை நீட்டித்துக் கொள்ள முதலாளிகளுக்கு பல்வேறு வழிவகைகளை ஊதிய சட்டம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன்மூலம் 8 மணி நேரத்திற்கு மேல் ஒரு தொழிலாளி வேலை செய்யும் பட்சத்தில் அவருக்கு இரு மடங்கு ஊதியம் அல்லது மிகை ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என்ற விதியை அது இல்லாமல் செய்யப்போகிறது
பணியிட பாதுகாப்பு ஆரோக்கியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொழிலாளர் சட்டம் :
இந்த சட்டம் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என உள்ளது பத்துக்கும் கீழான தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு அது பொருந்தாது. நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா நான்கில் மூன்று பங்கு வேலைவாய்ப்புகளை பத்துக்கும் கீழான தொழிலாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களைத் தருவதாகக் கூறுகிறார். அவரின் கூற்றுப்படி நான்கில் மூன்று பங்கு தொழிலாளர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது.
10 பேருக்கும் குறைவாக வேலை செய்யும் சிறு, குறு நிறுவனங்கள் வணிக கடைகளில்தான் தொழிலாளர்கள் அதிக அளவில் உடல்ரீதியாகப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மேலும் தொழிற்சாலை என்பதற்கான வரையறை இந்த புதிய சட்டத்தில் மாற்றப்பட்டுள்ளது. மின்சாரத்தைப் பயன்படுத்தி 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களும் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களும் பணி புரிந்திருக்க வேண்டும் என்ற வரையறை தற்போது இரட்டிப்பாகி உள்ளது. இதன்மூலம் இந்த சட்டம் பொருந்தும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் குறையும்.
ஒரு நிறுவனமோ அல்லது ஒப்பந்ததாரரோ 20 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டிருந்தால் அவர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர் சட்டம் பொருந்தும் என்ற நிலை மாற்றப்பட்டு தற்போது அதன் வரம்பை 50 ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் ஆக்கப்பட்டு மேலும் அவர்களை ஒட்டச் சுரண்ட வழி வகுக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு நிறுவனமும் சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தையும் இந்த புதிய சட்டத் திருத்தம் குறைத்துள்ளது.
தொழில் உறவுகள் சட்டம் :
தொழிற்சங்கச் சட்டம் 1926ம் படி தொழிற்சங்கத்தைப் பதிவு செய்ய ஏழு உறுப்பினர்கள் இருந்தாலே போதும் ஆனால் புதிய தொழில் உறவுகள் சட்டத்தின்படி அது குறைந்தபட்சம் 100 பேர் அல்லது 10% பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்கிறது. இதனால் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதையே அது கடினமாக்குகிறது. ஏற்கனவே தொழிற்சங்கத்தைத் தொடங்க முயற்சிக்கும் தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகள் ஏவப்பட்டு வேலையில் இருந்து நீக்கப்படுவது தொடர்கதைதான். அப்படியிருக்கத் தொழிற்சங்கம் தொடங்குவதற்கான நடைமுறைகளையும் புதிய சட்டங்கள் மேலும் சிக்கலுக்கு உள்ளாகிறது.
ஒரு தொழிற்சாலையில் தொழிற்சங்கம் 75 % உறுப்பினர்களைக் கொண்டிருந்தால் மட்டுமே அது கூட்டுப்பேரம் பேசுவதற்கு அங்கீகரிக்க முடியும் என்ற நடைமுறை சாத்தியமில்லாத வரைவு தொழிற்சங்கங்களின் கடுமையான எதிர்ப்பினால் 51 % ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
100 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களில் தொழில் நிறுத்தம், ஆட்குறைப்பு மற்றும் ஆலை மூடல் ஆகியவற்றிற்கு அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்று இருந்த பழையச் சட்டத்தின் தொழிலாளர் எண்ணிக்கையை புதிய சட்ட மசோதா 300 ஆக உயர்த்தியுள்ளது. மேலும் இந்த 300 எண்ணிக்கையையும் அரசே எப்போது வேண்டுமானாலும் உயர்த்திக் கொள்ளலாம் எனச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பான்மையான நிறுவனங்கள் 300 தொழிலாளர்களுக்கும் குறைவாகவே கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று நிலையாணைகள் (standing order) குறித்த சட்டத்தில் இருந்த தொழிலாளர்களின் வரம்பானது 100 இல் இருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நிலையாணைகள் சட்டத்திலுள்ள வேலை நேரம், ஊதியம், விடுமுறை நாட்கள், குறை தீர்க்கும் முறைகள், ஒழுங்கு விதிமுறைகள் குறித்த எந்தவித விதிகளும் இனி தேவையில்லை. இந்த நிறுவனங்களின் முதலாளிகள் தான் விரும்பியபடி தொழிலாளர்களைக் கசக்கிப் பிழியும் தூக்கி எறியவும் இதன்மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் செய்வதற்கான அறிவிப்பு காலத்தை 6 வாரங்களில் இருந்து 60 நாட்களாக புதிய சட்டம் உயர்த்தியுள்ளது. இதன்மூலம் தொழிலாளர்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடக்கூடிய ஆயுதமாக இருந்த வேலைநிறுத்தத்தைக் கூட கடினமாக்கி உள்ளது.
மேலும் பாதுகாப்புத் துறை சம்பந்தமான தொழிற்சாலையை ‘நிறுவனம்’ என்ற வரையறையில் இருந்து நீக்கியதோடு அதைத் தொழிலாளர்கள் எந்த விதமான பிரச்சனைகளை எழுப்ப அல்லது வேலைநிறுத்தம் செய்யவும் இருந்த உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது. இதனை சிறப்பு சட்டமாய் இப்போது ஒன்றிய அரசு கொண்டு வந்ததை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு துறை நிறுவனங்களின் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.
சமூக பாதுகாப்பு சட்டம் :
இந்தியாவில் 90 % தொழிலாளர்கள் அமைக்கப்படாத தொழிலாளர்களாக உள்ளனர். இவர்கள் ஒரே முதலாளியின் கீழ் தொடர்ந்து வேலை செய்து வருபவர்கள் அல்ல. இவர்களில் ஒரு பகுதியினர் அற்ப மூலதனத்தைக் கொண்டு சுய தொழில் செய்துவரும் அன்றாடங்காய்ச்சிகளாகவும் உள்ளனர்.
ஒட்டுமொத்த தொழிலாளர்கள் பெரும் பங்கு வகிக்கும் இவர்களின் பிரச்சினைகள் குறித்தும் அதனைச் சரி செய்வது குறித்து புதிய சட்டங்களில் எதுவும் இல்லை. சமூக நலத் திட்டங்களை அமைக்கப்படாத தொழிலாளர்கள் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறினாலும் அவை சட்டங்களில் வெற்றுச் சொற்களால் உள்ளதே தவிர அவற்றைப் பற்றி எவ்வித விவரங்களும் இல்லை.
அமைக்கப்படாத துறைகளில் மொத்தம் 42 கோடி தொழிலாளர்கள் பங்களிப்பு செய்து வருவதாகவும் இத்துறைகள் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% கிடைப்பதாகவும் 2019 இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார்.
நீம் ;
நீம் திட்டமானது 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு 2017ஆம் ஆண்டு பாஜக அரசால் சட்டமாக்கப்பட்டது. மேம்போக்காகப் பார்த்தால் பயிற்சி திட்டம் என்பது இளைஞர்களுக்குத் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களின் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டம் என்பது போன்று தோன்றும். ஆனால் உண்மையில் பயிற்சி அளித்தல் என்ற பெயரில் தொழிலாளர்களை நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுத்தி அதன் மூலம் அவரின் உழைப்பைச் சுரண்டுவது தான் இதன் நோக்கம்.
நீம் திட்டத்தின்படி படித்த இளைஞர்களுக்கு 3 வருடங்கள் வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி என்று அந்த 3 ஆண்டுகளும் குறைவான ஊதியத்தில் அவர்களின் உழைப்பை எளிதாகச் சுரண்ட முடியும். பயிற்சி பெறுபவர்களுக்கான ஊதியமானது குறைந்தபட்ச ஊதியம் என்ற அளவில் இருந்தாலே போதுமானது. இந்த ஊதியமும் கூட 50% அரசும் 50% நிறுவனமும் அளிக்கும். இதன் மூலம் மக்களின் வரிப்பணமே தொழிலாளர்களைச் சுரண்ட முதலாளிகளுக்கு வாரி வழங்கப்படுகிறது. மேலும் இவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் தொழிலாளர் இழப்பீடு சட்டம் மட்டுமே பொருந்தும். மற்ற எந்த தொழிலாளர் சட்டங்களும் பொருந்தாது.
இதன் மூலம் தொழிலாளர்கள் 240 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பணி புரிந்திருந்தால் பணி நிரந்தரம் கோரக்கூடிய சட்ட வாய்ப்புகளும் இனி இல்லாமல் செய்யப்படுகிறது. நீம் தொழிலாளிகள் வேலைக்குச் சேரும் பொழுதே அந்த நிறுவனத்தில் எக்காரணத்தைக் கொண்டும் வேலை கேட்கக் கூடாது என்று விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்துப் போட்டுத் தான் வேலைக்கே வருகிறார்கள். அதனால் பயிற்சி அளிக்கும் நிறுவனத்திற்குத் தொழிலாளர்கள் தேவைப்பட்டாலும் கூட அவர்கள் நீம் பயிற்சியாளர்களை வேலைக்கு எடுக்கத் தயாராக இல்லை.
FTE :
FTE குறிப்பிட்ட கால வேலை முறையின் கீழ் பணிக்கு அமர்த்தப்படும் இந்த தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வேலை செய்ய எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் போடப் படுகிறார்கள். அந்த ஒப்பந்தத்தில் வேலை தொடங்கும் காலம், முடிவடையும் காலம், ஊதியம் ஆகியவை அடங்கியிருக்கும். ஒப்பந்த காலம் முடிந்த பின்பு அவருடைய பணியிடம் காலியாக இருந்தாலும் கூட அவரால் பணியைத் தொடரவோ வேறு எந்தவிதமான கோரிக்கையையும் பலன்களையும் அல்லது இழப்பீடுகளையும் கோர அவருக்கு உரிமை கிடையாது.
இதன் மூலம் எந்த ஒரு முதலாளியும் நிரந்தர தொழிலாளர்களுக்குப் பதிலாக இந்த ஒப்பந்த குறிப்பிட்ட கால வேலை முறையின் மூலம் தொழிலாளர்களைத் தற்காலிகமாக வேலைக்கு அமர்த்திக் குறைந்த கூலியில் தொழிலாளர்களை அதிகமாகச் சுரண்ட முடியும். இதற்கு முன்னர் ஒப்பந்த, தற்காலிக, பயிற்சித் தொழிலாளர்கள் ஆகியோரை சட்டவிரோதமாக நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்திச் சுரண்டுவதை இனி குறிப்பிட்ட கால நடைமுறை தொழிலாளர்களை வைத்து சட்டரீதியாகச் சுரண்ட முடியும்.
சட்டத்தின் அனுமதி உடனே தேவையான நேரத்தில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி பின்னர் தேவையில்லாத பொழுது அவர்களைத் தூக்கி எறியவும் முடியும். மேலும் குறிப்பிட்ட காலம் வரை தொழிலாளர்கள் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்படக் கூடாது என்றோ அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றோ கோர முடியாது.
இப்போது இருக்கும் தொழிலாளர் சட்டங்களும் தொழிலாளர்களுக்குச் சாதகமானது அல்ல, முதலாளிகளுக்குச் சாதகமானதே. ஆனாலும் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற சில சலுகைகளும் உரிமைகளும் அதில் இருப்பது முதலாளிகளின் கண்களை உறுத்துகிறது. ஆனால் தொழிலாளர்கள் அவ்வாறு போராடிப் பெற்ற சில சட்டங்களையும் கூட முதலாளிகள் பயன்படுத்துவதில்லை என்பதே உண்மை. அவற்றைச் செயல்படுத்தத் தொழிலாளர்கள் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டி இருக்கிறது.
மேலும் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மையின் அளவு 10 % அளவிற்கு அதிகரித்துள்ளது. இது கோவிட் நோய்த்தொற்றிற்கு முந்தைய நிலையே. எழும் கொவிட் நோய்த்தொற்றால் இந்த நிலையை மேலும் மோசமாகியுள்ளது. அதே சமயம் அதனை பயன்படுத்தி கொண்டு முதலாளிகளின் சுரண்டலும் அதிகரித்துள்ளது. தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாப்பு தர வரிசை பட்டியலில் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர் 58 நாடுகளில் 151 ஆவது இடத்தை இந்தியா பெற்றிருப்பதாக ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.
ஆக கழுத்தை தேய்ந்து கட்டெறும்பு ஆகும் கதையாய் தான் நமது தொழிலாளர்கள் சட்டம் இப்போது உள்ளது.
ஆகவே சட்டத் திருத்தங்களுக்கு எதிராக அல்லது சட்ட உரிமைகளுக்காகப் போராடினால் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. தொழிலாளர்கள் தங்களை இதிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாது. கூலி உழைப்பு அடிமை முறையிலிருந்து எப்பொழுது அனைத்து தொழிலாளர்களும் விடுவிக்கப்பட்டு அனைத்து உழைக்கும் மக்களும் இந்த சுரண்டல் சமூகத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறார்களோ அப்போதுதான் இந்த பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்ற அறைகூவலுடன் இப்புத்தகம் முடிகிறது.
– தோழர் Nithi kumar