இன்று மாமேதை பிரெடரிக் ஏங்கெல்ஸ் பிறந்தநாள். அவர் எழுதிய ‘குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற புத்தகத்தை எளிய வடிவில் புரிந்து கொள்ள ராகுல சாங்கிருத்யாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற புத்தகத்தை பரிந்துரைக்கிறேன். கதை வடிவில் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தையவற்றையும் தற்காலத்தையும் படிப்படியாக இணைக்கிறது மேற்கண்ட புத்தகம். அதன் சுருக்கம் உங்கள் பார்வைக்கு…
வால்காவிலிருந்து கங்கை வரை கூறும் சமூக கட்டமைப்புகளும் அதன் மாற்றங்களும்
கி.மு. 6000த்தில் தொடங்கி கி.பி. 1942 வரையாக நடக்கும் நிகழ்வுகளில் ஏராளமான மாற்றங்களை மனிதகுலம் கண்டிருக்கின்றது. பெண்களின் நிலை, விவசாயம், பொருளாதாரம், குடும்பம் மற்றும் சமூக அமைப்பு, மதக் கோட்பாடுகள், படிப்பு எனும் கலை மற்றும் அதனால் ஏற்பட்ட இலக்கிய வளர்ச்சி என ஒவ்வொன்றையும் ஆராய்ந்து உண்மையினை அறிந்து கொள்ள இந்த புத்தகம் அதிகம் உதவும். அலைகுடிகளாக காடு மேடுகளில் திரிந்து வாழத் தொடங்கிய மனிதர்கள் குடியாட்சியினை இந்தியாவில் எவ்வாறாய் நிலைநிறுத்தினார்கள் என்பதைப் பற்றி இங்கே,
தாய்வழிச் சமூகமும் – குடிசை குழுக்களும்நிஷா – கி.மு. 6000
இரஷ்யாவின் வோல்கா நதிக்கரையில் வேட்டை ஒன்றைத் தவிர வேறெதையும் அறிந்திடாத ஆதிமனிஷியின் குடும்பம். ஆரம்ப காலங்களில் ஒரு குடும்பம் தாய்வழிச் சமூகமாகவே வாழ்ந்தது. அவளே அக்குடும்பத்திற்கும், அக்குடும்பத்தாரின் உணவுகளுக்கும் பொறுப்பானவள். வேட்டையினை வழிநடத்திச் செல்லும் அதிகாரமும், உணவினை பங்கிட்டு தரும் அதிகாரமும், குடும்ப உறுப்பினர்களை பல்வேறு சூழலில் இருந்து காப்பாற்றும் பொறுப்பும் அவளிடம் மட்டுமே இருக்கின்றது. இங்கு தந்தை, மகன், தமையன் என்ற பேதமை இல்லாமல் அனைவரும் அவளின் இச்சைக்குப் பாத்திரமானவர்கள். அங்கு இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அவள் மட்டுமே தாய் என்று கூறிடலாம் அன்றி தந்தைகளை அடையாளம் காண்பது நிறைவேறாத காரியம். அவளின் இணையை தேர்ந்தெடுக்கும் உரிமை அவளிடத்தில் மட்டுமே இருந்தது.
திவா – கி.மு. 3500
நிஷாவில் தொடங்கி திவா வரையிலான 2500 ஆண்டுகளில் தனித்தனி பரிவாரங்கள் ஒன்றாக இணைந்து குடிசையாக மாறியது. அக்குடிசையில் ஒரு தாய் வயிற்றின் வந்தவர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்கின்றார்கள். இதிலும் பெண் என்பவள் தான் தலைவி. ஆனால், இக்குடிசையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வினையும் அக்குடிசையில் இருக்கும் சிறுகுழுவே தீர்மானம் செய்கின்றது. வீடு கட்டுதல் தொடங்கி, உணவு சேகரிக்க, எதிரிகளுடன் சண்டையிட என ஒவ்வொன்றையும் அக்குழுவின் தீர்மானங்களின் படி பின்பற்றினார்கள். இம்மக்கள் தேன் மற்றும் பழங்களை சேகரிப்பது, நெருப்பிற்காக விறகுகள் சேகரிப்பது, வேட்டைகளில் ஈடுபடுவது போன்றவைகளை செய்தார்கள். இக்குடிசையின் தலைவி பெண்ணாக இருந்தாலும் அவளின் விருப்பபடி எந்த ஒரு விதிகளையும் மக்களிடத்தில் திணிக்க இயலாது. வழிநடத்தும் பொறுப்பில் இருந்து அவள் விலக்கப்பட்டாள் மாறாக பூஜைக்கு தலைமை வகித்தாள். உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, வேட்டைக்கு அதிக காடுகளும் விலங்குகளும் தேவைப்பட்டன. பல நேரங்களில் அண்டை குடிசைகளுக்கு சொந்தமான காடுகளில் சென்று வேட்டையாடி கலவரத்தினை உருவாக்கினார்கள். வெற்றி பெரும் குழு வால்காவிலேயே நிலைத்துவிடுகின்றது. தோல்வி அடையும் குழுக்கள் உயிரினை காப்பாற்ற இடம்பெயர்ந்தார்கள். அப்படியாக திவா சமூகத்தால் விரட்டியடிக்கப்பட்ட குரு மக்கள் பாமீரில் குடியேறினார்கள்.
அமிர்தாஷ்வன் – 3000 (பாமீர் மலைத் தொடர், மத்திய ஆசியா)
இந்த 1500 ஆண்டுகளில் இம்மக்களின் வாழ்வு முறை மாறியிருந்தது . பெண் தனக்கான துணையை தேர்ந்தெடுத்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்கள் இருப்பினும் அவளிற்கு பிடித்த இணையுடன் ஆடிப்பாடி கூடி மகிழ அவளுக்கு உரிமை இருக்கின்றது. வீட்டிற்கு வரும் உறவினர்கள், அகதிகள், நண்பர்களுக்கு அவ்வீட்டின் பெண்ணை தற்காலிகமாக ஒப்படைப்பது என்பது சம்பிரதாயமாக இருந்தது. குடும்பங்கள் அன்றும் கிராமம் அமைப்பின் அங்கமாக திகழ்கின்றது. இச்சமூகம், காடுகளில் தன்னிச்சையாக திரிந்து கொண்டிருந்த ஆடுகள், மாடுகள், மற்றும் குதிரைகளை வீட்டின் தேவைகளுக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்க கற்றிருக்கின்றார்கள் கிராமத்தினை நிர்வாகிக்க ஒரு தலைவன் இருந்தான். போர்திறத்தின் அடிப்படையில் அத்தலைவன் தேர்ந்தெடுக்கப்பட்டான். கிராமத்தின் வளர்ச்சிகள் அவன் பார்வையில் மேற்கொள்ளப்பட்டன. இச்சமூகத்தில் கால்நடைகளையும் பெண்களையும் கவர்ந்து செல்லுதலின் விளைவாக போர் ஏற்பட்டது. தோல்வியடையும் குழுவில் இருக்கும் ஆண்கள் அனைவரையும் கொன்றுவிட்டு பெண்களை தங்களின் இனத்தில் சேர்த்துக் கொண்டதன் விளைவாக பலதார மண வழக்கம் ஏற்பட்டது. இப்போரில் வெற்றிபெற்றவர்கள் அங்கே நிலைத்தே விட்டார்கள். தோல்வியடைந்தவர்கள் வேறொரு ஆற்றங்கரையினை தேடி நகர்ந்தார்கள்.
ப்ருஹூதன் – 2500 (தஜிகிஸ்தான் நாட்டில் இருக்கும் வட்சு ஆற்றங்கரையில் )
ஒரு இனம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடம் நோக்கி நகரும் காலத்தில் புதுப்புது மனிதர்களையும், பழக்கவழக்கங்களையும் தேவைக்கு ஏற்றாற் போல் மாற்றி பயன்படுத்திக் கொண்டது. அப்படியாகவே புரு இனத்திற்கு தாமிரத்தின் அறிமுகமும், அதனை வாங்குவதற்கு பண்டமாற்று முறை என்ற பொருளாதாரத்தின் முதல்படி நிலையை எட்டியது அச்சமூகம். ஒரு குதிரையினை விலையாக கொடுத்து பதிலிற்கு செம்பினாலான பாத்திரங்களையும் ஆயுதங்களையும் வாங்கினார்கள். கற்கோடாரிகளின் இடத்தினை தாமிரக் கோடாரிகளும் கத்திகளும் ஆக்கரமித்தன. கல், மரம், மண் கொண்டு வீடுகளை கட்டினார்கள். உணவிற்காக விவசாயம் என்ற ஒரு உத்தியினை கடைபிடித்தார்கள். மண்ணைக் கீறி நெல்லும், கோதுமையும் விளைவித்து அதனை பக்குவம் செய்து உணவாக சமைத்தலில் வெற்றி அடைந்தது மனித இனம். பெண்கள் அணிய அழகான வெள்ளி மற்றும் தங்க ஆபரணங்களை செய்தார்கள். அவற்றையும் ஆயுதங்களையும் செய்ய வெளியூர்களில் இருந்து அடிமைகளை வாங்கிவந்தார்கள். தங்களுக்கு தேவையான பொருட்களை மீட்டுவதில் இருதரப்பினருக்கும் இடையில் போட்டி நிலவியது. போட்டி போராக மாறியது. மேல் மத்ர்களும், புரு குலத்தாரும் இணைந்து, பர்ஷூக்களையும், கீழ் மத்தர்களையும் வெற்றி கொண்டார்கள். ஒரு இனத்தின் கிராமத் தலைவனாக இருந்தவன் பல்வேறு இனங்களுக்காக போராடி வெற்றிவாகை சூடியதால் அவ்விரு இனத்திற்குமான இந்திரனாக மாறினான். இந்திரன் என்பது பல இனமக்களிற்கான ஒரு பாதுகாவலனிற்கு அளிக்கப்பட்ட பட்டமாகும்.
அரசர்களும் பிராமணர்களும் க்ஷத்திரியர்களும் அடிமைகளும் உருவாகிய விதம்
புருதானன் (கி.மு. 2000)
மேல் ஸ்வஸ்த் வட்சு ஆற்றங்கரையில் இருந்து புறப்பட்ட குரு, புரு, காந்தாரர், மத்ரர், மல்லர், ஷிவி, மற்றும் உஷீண மக்கள் ஆரியர்களாக, பாமீர், இந்துகுஷ் மலைகளை கடந்து ஸ்வத் வேலியில் வசிக்கத் தொடங்கினார்கள். இந்திரன் என்பவன் படைத்தலைவனாக இருந்த போதும் அவனுக்கென வருடத்திற்கு ஒரு முறை விழா சிறப்பிக்கப்பட்டு அன்று மட்டுமே குதிரை மாமிசத்தினை சாப்பிட இம்மக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். பெண்கள் முன்பு போல் தமது இஷ்டப்படி வாழ இயலாத நிலை ஏற்பட்டது. ஆனால் இந்திரவிழா அன்று மட்டும் தன்னுடைய துணையை தேர்ந்தெடுக்க உரிமைக்குரியவள் ஆகின்றாள். நெருப்பினையே கடவுளாக வணங்குகினார்கள். தாமிரத்தை மட்டும் பண்டமாற்றம் செய்த இம்மக்கள், தங்கம், வெள்ளி, மற்றும் இரத்தினத்திற்காக பண்டமாற்றுமுறையினை தொடர்ந்து மேற்கொண்டார்கள். செல்லும் இடமெங்கும் காணும் மக்களின் பழக்கவழக்கங்களை தங்களுக்கு தக்கவாறு மாற்றிக் கொண்டார்கள். புஷ்கலாவதியில் இவர்கள் சந்தித்த மக்கள் கறுமை நிறத்துடன் கூடிய குட்டை அசுர குலத்தவர்கள். இவர்களின் சாலைகளும், வீதி அமைப்புகளும், குளங்களும், தடாகங்களும் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது. குளிர் குறைவான பகுதியில் வாழும் இவர்கள் பருத்தி இழையாலான ஆடைகளை அணிந்தார்கள். அரசனின் ஆட்சி முறையையும், அடிமைகளையும் கொண்டிருந்தது அசுர இனம். ஆரிய குலப் பெண்களை கவர்வதில் தொடங்கிய சிறு கலவரத்தின் விளைவாக ஏற்பட்ட போரினால் சிந்துவிலிருந்து அசுரர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள்.
அங்கிரா (கி.மு 1800) (காந்தாரம் – தாட்சசீலம்)
குருகுலம் என்ற ஒன்று உருவாக்கப்பட்டு தாங்கள் பயணித்து வந்த பாதையினை வாய்வழிப்பாட்டாக மனனம் செய்து வந்தார்கள் ஆரியர்கள். இக்கல்வியின் மூலம் இருநூறு ஆண்டுகள் அசுரர்களுடன் நடைபெற்ற போரின் விளைவாக, அவர்களிடமிருந்து திருடப்பட்ட கலைகளையும் கற்றுத் தேர்ந்தார்கள் ஆரியர்கள். எழுத்துருக்களை மட்டும் அசுரர்களிடம் இருந்து ஆரியர்கள் கற்றுக் கொள்ள அதிக நாட்கள் தேவைப்பட்டது. தச்சர்கள், கொல்லர்கள், கருமர்கள், படைவீரர்கள் என ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக ஆட்களை வைத்திருந்த அசுரர்களின் பழக்கத்தினை ஆரியர்கள் பின்பற்றினார்கள். அசுரர்களின் வீடுகள் சுட்ட செங்கல்லினால் கட்டப்பட்ட, விருந்தினர்களுக்கான அறைகள், புகை போக்கியுடன் கூடிய தனி சமையலறை, விசாலமான படுக்கை அறைகளை கொண்டிருந்தது. குடிசைகளில் வாழ்ந்து பழக்கப்பட்ட ஆரியர்களுக்கு கட்டிடக்கலை என்பது கொஞ்சம் சிரமமான காரியமாக ஆரம்பத்தில் இருந்தது. ஆரியர்கள் வெறுத்த ஒன்று அசுரர்களிடம் இருக்குமானால் அது புரோகிதர்கள் கொண்டு லிங்கத்தினை வணங்கியதாகும். ஆனால் யாருக்குத் தெரியும், பின்னாட்களில் இந்த புரோகிதமே ஒரு சமயத்தை உருவாக்கி அதில் நான்கு வர்ணங்களையும் புகுத்துமென்று. அசுரகுலத்தில் இருந்த அரச அமைப்பின் பயனை உணர்ந்த சிலர் இந்திரர்களை அரசர்களாக்க விரும்பினார்கள்.
சுதாஸ் – குருபாஞ்சாலம் (கி.மு. 1500)
இங்கு இந்திரர்கள் அரசர்களாக்கப்பட்டார்கள். முன்னூறு ஆண்டுகளில் அசுரர்களின் புரோகித பழக்கம் ஆரியர்களிடம் ஒட்டிக் கொண்டது. ஆரியர்களில் புரோகிதம் செய்பவர்கள் பிராமணர்களானார்கள். போரில் ஈடுபட்டவர்கள் க்ஷத்திரியர்களானார்கள். இவர்களுக்கு சேவகம் செய்யவும், விற்பனைக்கும், பொருள் ஈட்டவும் அடிமைகள் தேவைப்பட்டார்கள். அடிமை என்ற இனம் தொடர ஆரம்பித்தது. பெண்களின் நிலையானது அடிமை நிலைமைக்கும் அடுத்த இடத்தில் இருந்தது. அரசர்களிடமிருந்து சலுகைகள் பெற தங்கள் வீட்டுப் பெண்களை அரசனிற்கு காணிக்கையாக அனுப்பிவைத்தார்கள். பல இடங்களில் இந்திரநிலை தொடர விரும்பிய ஆரிய இனங்களும் இருந்தன. ஆனால், முன்னேறிய ஒரு சமூக அமைப்பில் இருந்து பின்னோக்கி செல்வதென்பது நடக்காத ஒன்றாகும் என்பதை அவர்கள் உணருவதற்கு அதிக காலம் எடுத்தது.
பிரவாஹன் – கி.மு 700 (பாஞ்சாலம்)
குருகுலக் கல்வி அதிவேகத்தில் வளர்ந்தது. கூடவே ரிக், யஜூர், சாம வேதங்கள் தோன்றின. அரசனின் பிள்ளைகள் பாடங்களைக் கற்றுக் கொள்ள குருகுலத்திற்கு அனுப்பப்பட்டார்கள். குருதட்சணையாக பொன்னும், பொருளும், அடிமைகளும், பெண்களும், கிராமங்களும் அரசனால் குருகுல ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டது. வசிட்டர் மற்றும் விஷ்வாமித்திரர் போன்ற மகரிஷிகள் இந்திரன், வருணன், மற்றும் பிரம்மா ஆகியோரின் மீது பாடல்கள் எழுதி, அதன் மூலம், மக்கள் அனைவரும் அரசனுக்கு கட்டுப்பட்டவர் என்ற நம்பிக்கையினை போலியாக உருவாக்கினார்கள். மேலும் வேள்விகளின் விளைவாகவே நல்ல வாழ்க்கை என்றும் மக்களின் மனதில் நிலைநிறுத்திவிட்டுச் சென்றார்கள். கடவுள் என்ற ஒன்று இருப்பதை நம்பவைக்க தினம் தினம் புதிது புதிதாக உண்மையற்ற சித்தாந்தங்கள் உருவாகின. பரம்பொருள் என்ற பிரம்மம் மற்றும் மறுபிறவி போன்ற தத்துவங்களை உருவாக்கி உயர்குலத்தில் உள்ளோருக்கு என்றும் வருமானம் கிடைக்கும் வழியினை உருவாக்கி வைத்தார்கள். அரசபதவி, பிரமணப்பதவி, வேள்வி, பிரம்மவாதம் எல்லாம் மக்களின் உழைப்பை சுரண்டுவதற்காக உருவாக்கப்பட்டது என்பதனை அன்று வெகுசிலரே அறிந்திருந்தார்கள்.
வாக்குரிமையும் யாவும் அழியும் என்ற பௌத்த எண்ணங்களின் தோன்றுதல்களும்
பந்து மல்லன் – 9 (கி.மு. 490) பௌத்த நூல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. ஒரு பக்கம் அரசனும், அவனின் வருமானமும் குறைவில்லாமல் வர ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், அரசனின் ஆட்சிக்கு கீழ் வாழ விரும்பாத மக்களைக் கொண்ட சமூக சபைகள் இங்குமங்குமாய் இயங்கிக் கொண்டே இருந்தன. ஆனாலும், தலைவனின் சொல்லிற்கு கட்டுப்படாமல் சமூக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் சமூக அமைப்பே தொடர்ந்தது. அதில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்திற்கும் மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. எதிர்ப்பு அல்லது அதிருப்தி தொடர்ந்து வந்தால் பெரும்பான்மை மக்களின் கருத்துகளுக்கு ஏற்றவாறு முடிவுகள் எடுக்கப்பட்டன. பெரும்பான்மை கருத்துகளை அறிய ஓட்டுரிமை கொண்டுவரப்பட்டது இக்காலக்கட்டத்தில் தான். ஆதரவிற்கு சிவப்பு நிறக்குச்சிகளும், எதிர்ப்பிற்கு கருப்பு நிறக்குச்சிகளும் மக்களுக்கு அளிக்கப்பட்டு, சபைக்கு திரும்பி வரும் குச்சிகளின் அளவினை வைத்து விருப்பங்கள் அறியப்பட்டன. அரசகுலம், அடிமை குலம், பிராமணர், க்ஷத்ரியர் என்று ஒவ்வொருவரும் அறிமுகமான காலத்தில் இருந்து வெகு நாட்கள் கழித்தே வணிகர்களின் வாழ்க்கை வரலாற்றுக்குள் வருகின்றது. இவர்கள் ஈட்டிய பொருள் கொண்டு பெரிய பெரிய சபைகளை கட்டி, பல்வேறு அறிஞர்களை அழைத்து வந்து இறைசார் சொற்போர்களை நடத்தினார்கள். வேள்வியை விஞ்சிக் கொண்டு பிரம்மமும் மறு பிறவியும் நிலை பெற்ற காலத்தில் எப்பொருளும் நிலையானது அல்ல என்ற கோரிக்கைகளுடன் கூடிய பௌதீக வாதமும் புத்தமதமும் தோன்றியது
நாகதத்தன் – கி.மு. 335 (அர்த்த சாஸ்திரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது)
இதுவரை சின்ன சின்ன மக்களாட்சி கொண்ட அமைப்பிற்கே அரசன் என்று ஒருவன் இருந்தான். ஆனால் அனைத்து மக்களாட்சிகளையும் ஒன்றிணைத்து பெரிய நாட்டினை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்குமே தோன்றவில்லை. பெரும்பலம் கொண்டு ஒரு படை தங்களை நோக்கி படையெடுக்கும் காலத்தில் தான், ஒருங்கிணைந்த நாட்டால் மட்டுமே எதிரிகளை எதிர்கொள்ள முடியும் என்ற எண்ணம் பொதுவாக அனைவரிடத்திலும் தோன்றியது. ஆனால் ஒரு முறை ஒரு இனம் இராஜ்ஜியத்தில் இணைந்துவிட்டால், அதன் பிறகு அதில் இருந்து பின் வாங்கவே முடியாது. நாட்டின் வளர்ச்சிப்பாதைக்காக போடப்படும் திட்டங்கள் அனைத்திற்கும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நிர்வாக பராமரிப்பிற்காக விதிக்கப்படும் வரியினை அனைவரும் பங்கிட்டே செலுத்த வேண்டும். ஒரு சிறிய மக்களாட்சியே கொஞ்சம் பெரியதாக, பெரிய நிலத்திற்காக, பெரிய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அந்த ஆட்சி மன்னனால் ஆளப்படுகின்ற குடியாட்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள் மக்கள்.
பிரபா – 11 (கி.பி. 50 அயோத்யா) – சுபர்ண யௌதன் (கிபி 420)
பாரதத்தின் தலைசிறந்த இலக்கியங்களாக வால்மீகியின் இராமாயாணமும், காளிதாசின் – இரகு வம்சமும், குமார சம்பவமும் இயற்றப்பட்டது. இராமாயாணம் சுங்க வம்ச சக்கரவர்த்தி புஷ்யனையோ, அக்னி மித்திரனையோ காவியத்தலைவனாக ஏற்று, சதேகத்தை அயோத்தியாவாக மாற்றி எழுதினார். காளிதாசனும் அவ்வழியே சந்திரகுப்த விக்கிரமாதித்யனை கவிப்பொருளாக்கி இரகு வம்சத்தினை இயற்றினார். பணமும் பொருளும் இருக்குமிடத்தில் மதங்களும், மதச்சடங்கினை செய்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இதிலிருந்து அந்நியர்களான முஸல்மான்கள் இந்தியாவில் காலடி எடுத்துவைக்கும் வரை பல்வேறு கல்விநிலையங்கள் திறக்கப்பட்டன. அதில் நாளந்தா மிக முக்கியமான ஒன்றாகும். நாடக அரங்கங்கள் தோன்றின. அவ்வாறாகவே இலக்கியங்களும், வரலாறுகளும் உண்மைக்குப் புறம்பாகவும், மாறாகவும் எழுதப்பட்டன . பல்வேறு இடங்களில் கிராமசபைகளும், சிறுசிறு மக்களாட்சிகளும் அழிந்து போயின.
துர்முகன் (கி.பி 630) (ஹர்ஷவர்தன் சரித்திரம் கொண்டு எழுதப்பட்டவை)
பிராமணத்துவ கொள்கைகளுக்கு எதிராக புத்தமதம் பாரதத்தில் வேரூன்றி பின்பு அழிந்தும் போனது. பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. திருமணமான முதல் இரவு அன்று அவர்கள் அரண்மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். விதவை மறுமணமும், கருக்கலைப்பும் குற்றமென அதிகார வர்க்கம் கூற மாற்று மருந்தாக சதி எனும் உடன்கட்டை உருவானது. அரசன் தன் வருவாயில் பள்ளிகளுக்கும், பிராமணர்களுக்கும், புத்தமடங்களுக்கும் வரும் வருமானத்தில் மிச்சமாவதைக் கொடுத்தான். ஆனால் அடிமைகளின் நிலை தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தது. அதை யாரும் போக்குவதை விரும்பவில்லை.
சக்கரபாணி கி.பி. 1300 முதல் சுரையா கி.பி. 1600 வரை (சக்கரபாணி – கிபி 1200ல் நடைபெறும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. நைஷத சரிதம், கண்டன் கண்ட காத்ய போன்ற நூல்கள் மற்றும் கல்வெட்டுகள், பட்டயங்கள் ஆகியவற்றைக் கொண்டு எழுதப்பட்டது)
நாளந்தா வெறும் பகட்டிற்காக வாழ்ந்த கல்விநிலையமாக மாறிப்போனது. அங்கே பொய்களும், வேற்றுமைகளும் கற்பிக்கப்பட்டன. அதனால் அங்கிருந்து வெளியேறிய பலரும் இந்து என்ற மதத்திற்கு எதிராக பிரச்சாரத்தினை மேற்கொண்டார்கள். அதே சமயத்தில் மேற்கில் இஸ்லாம் என்ற மதம் தோன்றியது, அம்மதத்தில் இருந்தவர்கள் இந்தியாவினை நோக்கி படையெடுத்து பல்வேறு இடங்களை கையகப்படுத்தினார்கள். ஆரம்பத்தில் இஸ்லாத்தை பரப்பவே வந்திருந்தாலும், அதில் தோல்வி அடைந்தார்கள் மாறாக மக்களின் மனதில் நிலைத்து நிற்கும்படி மறைந்து போன கிராம சபைகளை மீண்டும் உருவாக்கிக் கொடுத்தார்கள். கில்ஜீயின் காலத்திலும், அதற்கு பிறகும் கூட வலுக்கட்டாயமாக யாரையும் முஸ்லமானாக மாற்ற முயற்சிக்கவில்லை. மாறாக தீன் இலாஹீ போன்ற மதத்தினை தோற்றுவித்து, இந்துக்களும் இஸ்லாமியர்களும் சேர்ந்து திருமண பந்தத்தில் இணைந்து அனைவரும் ஒரு மதத்தவராக இருக்க விரும்பினார் அக்பர்.
ஜமீன்தாரி முறையும் பொதுவுடமைக் கொள்கைகளும்
ரேகா பகத் கி.பி. 1800
இருநூறு ஆண்டுகளில் மீண்டும் கிராமசபைகள் அழிந்து போயின. கிழக்கிந்தியக் கம்பெனிகளின் ஜமீன்தாரி முறை உருவானது. ஊரில் செல்வாக்கு பெற்றவர்களின் சொத்தினை பந்தையத்தில் வைத்து கிராமமக்கள் அனைவரையும் அவர்களுக்கு கீழ் கட்டுப்படுத்த நினைத்தது. அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள். இதுநாள் வரை அரசனுக்கு மட்டும் வரி செலுத்திய மக்கள் இரட்டை வரி முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள். கிராம சபை செய்த நீர் மேலாண்மை, வறட்சி மேலாண்மை இது எவைப்பற்றியும் கம்பெனிக்கோ, ஜமீன்தார்களுக்கோ எந்தவொரு கவலையும் கருத்துகளும் இல்லை. அவர்களின் அதிகாரமெல்லாம் வரிகளின் மீதே இருந்தது. இம்முறை ஏழைகளை மேலும் ஏழையாக்கியது. செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்கியது.
மங்கள் சிங் – 1857 to சுமேர் – 1942
ஒரு பெரிய நாடானது வெறும் நான்கைந்து மக்களாட்சி செய்யும் கிராமங்கள் என்றில்லாமல் ஒட்டுமொத்த தேசியத்தையும் ஒன்றிணைக்கும் சக்தி என்று புரிந்து கொள்ள மக்களுக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டிருக்கின்றது. தனித்தனி அரசுகளாக இராஜ்ஜியங்களாக இருந்த அனைத்தும் ஒன்றாய் இந்தியாவென உருவெடுத்தது என்னவோ வெறும் 160 ஆண்டுகளுக்கு முன்பு தான். ஒரு பெரிய தேசத்தை இயக்க மக்களாட்சி என்பது தேவையாகவே இருக்கின்றது. ஆனாலும் அதில் பொருளாதார அடிப்படையில் முதலாளி வர்க்கம் அதிக பலனையும், உழைப்பாளி வர்க்கம் குறைவான பலனையும் பெறுகின்றது. பொதுவுடமையையும், சகோதரத்துவத்தையும், கம்யூனிசத்தின் தேவையையும் தொடர்ந்து சூழ்நிலை உருவாக்கிக் கொண்டே இருந்தது. ஆதிகுடிகளாக சுற்றித்திரிந்த இந்திய மூதாதையர்களின் வாழ்வு பல்வேறு இடங்களில், பல்வேறு சூழல்களில், பல்வேறு ஆட்சிகளுக்கு உட்பட்டு இறுதியில் சுதேசிகளாக யாருக்கும் அடிபணியாத பொதுவுடமையினை நோக்கி முன்னேறிய காலக்கட்டம் இதுவே. அதற்கு பின் நடந்ததெல்லாம் சரித்திர நிகழ்வுகள். இங்கு அதுவும் ஓர வஞ்சகத்துடன் வடிவமைக்கப்பட்டு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
வால்காவிலிருந்து கங்கை வரை – இராகுல சாங்கிருத்யாயன் அவர்களால் 1942ல் எழுதப்பட்டு, 1943ல் வெளிவந்தது. இந்திய பயண எழுத்துகளின் தந்தை என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மனிதர் இவர். இவரின் வால்காவிலிருந்து கங்கை வரை என்ற ஒரு நூல் ஆரியர்கள் எவ்வாறாய் இரஷ்யாவின் வால்கா நதிக்கரையில் இருந்து புலம்பெயர்ந்து பாரதம் என்ற பெரும் நிலப்பரப்பில் நிலைபெற்று நின்றார்கள் என்பதைப் பற்றிய 20 கதைகளைக் கொண்டிருக்கின்றது. அந்த 20 கதைகளிலிருந்து திரட்டப்பட்ட சிறிய குறிப்பு தான் இது.
தோழர் பாரதிநாதன்