காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், சான்மினா எஸ்சிஅய் இந்தியா லிமிடெட் தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்றளவில், 428 நேரடி நிரந்தர தொழிலாளர்கள் உள்ளனர்.
கலிஃபோர்னியாவை தலைமையகமாகக் கொண்ட சான்மினா என்ற இந்த பன்னாட்டு நிறுவனம், 19 நாடுகளில், 80 கிளைகளுடன், 50,000 தொழிலாளர்களைப் பணிக்கமர்த்தி உள்ளதாக, ஒரு கட்டத்தில் நிர்வாகம் சொன்னது. மிகச் சமீபத்தில், நிறுவனத்தின் இந்திய செயல் நடவடிக்கைகளில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நுழைந்துள்ளது.
தொலைதொடர்பு, பாதுகாப்பு, மல்டிமீடியா, என்டர்பிரைசஸ் கம்ப்யூட்டிங், எரி ஆற்றல் மின்துறை, இரண்டாம், மூன்றாம், நான்காம் தலைமுறை அலைக்கற்றை தொலைத் தொடர்பு துறைகளுக்கு, கேந்திரமான பொருட்களை, ஒரகடம் சான்மினா தயாரிக்கிறது.
ஒருமுறை நிர்வாகம், அய்என்டியுசி சங்கத்துடன் ஒப்பந்தம் என்ற ஒன்றை, தொழிலாளர்கள் மீது திணித்தது. மற்றபடி, ஒருதலைபட்சமான ஊதிய உயர்வு அறிவிப்பே, இங்கே வாடிக்கையாக இருந்தது.
தொழிலாளர்கள் சிஅய்டியு வில் இணைந்து எடுத்த முயற்சிகள் நசுக்கப்பட்டன. முன்னணிகளுக்கு கணக்கு முடிக்கப்பட்டது. பின்னர், ஏஅய்சிசிடியு இணைப்பு செங்கை அண்ணா மாவட்ட ஜனநாயக தொழிலாளர் சங்கம் வந்தது. அதுவே, எல்டியுசி இணைப்பு உழைப்போர் உரிமை இயக்கம் ஆனது. இப்போது, நிறுவன பதிவேடுகளில் பெயர்கள் இடம் பெற்றுள்ள தொழிலாளர்களை மட்டுமே நிர்வாகிகளாகக் கொண்டுள்ள, எல்டியுசி இணைப்பு சான்மினா தொழிலாளர் சங்கமாக மாறி உள்ளது.
01.10.2018, 01.10.2019, 01.10.2020, சம்பள உயர்வு கோரிய தொழில் தகராறு ஒன்று, ஏஅய்சிசிடியு சங்கத்தால் எழுப்பப்பட்டு, 25.02.2021 அன்று அசல் மனு எண் 3ஃ2021 என, நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டது. எல்டியுசி இணைப்பு உழைப்போர் உரிமை இயக்கம், 28.03.2022 அன்று தரப்பினராக வழக்கில் சேர்க்கப்பட்டு, வழக்கு நடத்தப்பட்டது.
பல கோரிக்கைகள், கூடுதல் தொகைகள் வழக்கில் கேட்கப்பட்டாலும், 01.10.2018 முதல் ரூ.7,500, 01.10.2019 முதல் ரூ.5,000, 01.10.2020 முதல் ரூ.2,500 சம்பள உயர்வு வேண்டும் எனவும், இந்த உயர்வு ஏற்கனவே தரப்பட்ட உயர்வை விடக் கூடுதலாக இருக்க வேண்டும் எனவும், கோரிக்கையை சங்கம் மாற்றிக்கொண்டது.
சங்க தரப்பில், எல்டியுசி நிர்வாகி தினகரன் சாட்சி சொன்னார். வேறு சாட்சிகளையோ, வேறு ஒப்பிடக்கூடிய நிறுவனங்களின் சம்பள ரசீதுகளையோ, அப்போது சங்கத்தால் வழக்கில் தாக்க செய்ய முடியவில்லை. வழக்கிற்கும் சான்மீனா கிளைச் சங்க நிர்வாகிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு இருந்ததாகச் சொல்ல முடியாது. அதற்கு சங்க முன்னணிகள் நித்தியானந்தம், லோகநாதன், சாரதி, குணசேகரன், எழிலரசி, சோலையப்பன் ஆகியோர் வேலை நீக்கத்தில் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது, முக்கியக் காரணமாக இருந்தது.
போனஸ் வழக்கு ஆவணங்களை, நாம் சம்பள வழக்கில் கொண்டு வந்து விட்டோம். அதன்படி, நிறுவனத்தில் சில வருடங்கள் தொடர்ந்து லாபம் இருந்தது, போனஸ் போக, (செட் ஆன்) ஒதுக்கக்கூடிய உபரி இருந்தது பளிச்சென புலப்பட்டது. நிர்வாகம், ஒப்பிடக்கூடிய நிறுவனங்களில் சம்பளம் குறைவு என்று காட்ட, தன்னால் சங்கம் கோரிய சம்பள உயர்வு தர முடியாது எனக் காட்ட, எந்த சாட்சியமும் தாக்கல் செய்யவில்லை. நம் தரப்பில், அர்ஜுன் என்ற தொழிலாளியின் சம்பள ரசீது தாக்கல் செய்தோம். ஹனில் ஆட்டோமோட்டிவ் சம்பளம் பற்றிச் சொன்னோம். தொழில் தீர்ப்பாய நீதிபதி தீப்தி அருள்நிதி அவர்கள் நம் தரப்பில் தொழிலாளர்கள் தந்த கடிதங்கள், நடந்த வேலை நிறுத்தங்கள், வழங்கப்பட்ட ஏற்புடைய அறிவுரைகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, தொழிற் தகராறு எழுப்ப, சங்கத்திற்கு உரிமை உண்டு என தீர்ப்பளித்தார். பணவீக்கம் விலைவாசி உயர்வைச் சுட்டிக்காட்டியும், சங்கம் கோரிய சம்பள உயர்வு ரூ.15,000 தந்தால் கூட, அர்ஜுன் என்ற தொழிலாளியின் சம்பளம் 01.10.2020 அன்று ரூ.39,565 தான் வரும் எனக் கணக்கிட்ட தீர்ப்பாயம், நமக்கு ஏற்கனவே நிர்வாகம் தந்த சம்பள உயர்வு போக, 01.10.2018 முதல் ரூ.7500, 01.10.2019 முதல் ரூ.5,000, 01.10.2020 முதல் ரூ.2,500 கூடுதலாகச் சம்பளம் உயர்வு தர, உத்தரவிட்டது.
துவக்கத்தில், இந்த வழக்கில் நாமே பெரிதும் நம்பிக்கை வைக்கவில்லை. வழக்கின் இறுதிக் கட்டத்தில், தோழர் அர்ஜூன் மற்றும் உள்ளே வேலை செய்யும் தொழிலாளர்கள் நீதிமன்றத்திற்கு வரத் துவங்கினார்கள். வழக்கு வெற்றி, 428 தொழிலாளர்களையும் மகிழ்ச்சி அடைய வைத்தது.
நிர்வாகம் தீர்ப்புக்கு எதிராக, ரிட் மனு தாக்கல் செய்தது. நீதிபதி தண்டபாணி அவர்கள், பார்த்த மாத்திரத்தில் சுமார் ரூ.13 கோடி முதல் ரூ.18.14 கோடி வரையிலான லாபத்தை, ரூ.272 கோடி லாபம் என தீர்ப்பாயம் தவறாக கணக்கில் கொண்டு சம்பள உயர்வு தந்துள்ளது தெரிவதால், 24.07.2023 அன்று தீர்ப்பாய தீர்ப்புக்கு, தடை வழங்கினார். ஆனால் நல்லெண்ண அடிப்படையில், 01.10.2018 முதல் ரூ.5,000, 01.10.2019 முதல் ரூ.3,000 01.10.2020 முதல் ரூ.2,000 என, 01.10.2020 முதல் ஏற்கனவே தந்த உயர்வுக்கும் மேல் ரூ.10,000 தரச் சொன்னார். இந்த நிபந்தனைக்குட்பட்டே, தடை வழங்கினார்.
அதற்கெதிராக, நிர்வாகம் தொடர்ந்த ரிட் அப்பீல், திரும்பப் பெறப்பட்டது. நிர்வாகத்தின் மறுபரிசீலனை மனுவும், தள்ளுபடி ஆனது. நாம் நிர்வாகத்தின் மீது குற்றவியல் வழக்கு போடுமாறு அரசிடம் வலியுறுத்தினோம்.
அதன் பிறகு தான், பேச்சுவார்த்தைகள் துவங்கின. ஆறு பேரை, வேலைக்கு எடுக்க கோரினோம். சங்கத்துடன் பேசி ஒப்பந்தம் போடச் சொன்னோம். நிர்வாகம் ஆறு பேர் பிரச்சனையில் கணக்கு முடிப்பது மட்டுமே முடியும், வேலை தர முடியாது எனவும், பணிக்குழு ஒப்பந்தம் போடட்டும் எனவும், சொன்னது.
உழைப்போர் உரிமை இயக்க கிளை, இடது தொழிற்சங்க மய்யம் மூலம் தோழர்கள் குமாரசாமி, நித்தியானந்தம், எழிலரசி, அர்ஜுன், கலையரசன், சலீம், கார்த்திக், விஜயபாரதி ஆகியோர் தொழிலாளர் துறை முன் பேசினோம்.
“தீர்ப்பு தொகை தீர்ப்பு தொகை” என்று பேசினால், வழக்கு மட்டுமே 15/20 வருடங்கள் நடக்கும், முடிவு சாதகமாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்பதால், அதிகபட்ச தொகையை பேசியே பெற முயற்சிக்கலாம் எனவும், நிறுவன பதிவேட்டில் இருப்பவர்கள் மட்டுமே நிர்வாகிகளாக இருக்கிற எல்டியுசி இணைப்பு சங்கம் மூலம் ஒப்பந்தம் போட்டு, சங்கம் பேசி ஒப்பந்தம் என்பதை நிறுவலாம் எனவும், இரண்டு கொள்கை முடிவுகள் எடுத்து, பொதுப் பேரவை போட்டு ஒப்புதல் பெற்று அடுத்தடுத்து பேசினோம்.
அனுபவம் இல்லாததால், தொழிலாளர்கள் முதலில், சற்று குழம்பினார்கள். ஆறு பேர் நிலைமை என்ன, சங்கம் இருக்குமா பணிக்குழு இருக்குமா, தீர்ப்புப்படி ஏன் சம்பள உயர்வு வராது என்ற கேள்விகளுக்கு, வாயில் கூட்டங்கள், தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் நிர்வாகக் குழு கூட்டங்கள் மூலம், பதில் சொன்னோம். உணர்ச்சி மயமான கேள்விகளுக்கு, அறிவு பூர்வமான பதில்களை, தொழிலாளர்கள் தேடித் தெளிவு பெற உதவினோம். அதனால் தான், தான் சொன்னதைத் தாண்டி, ஒற்றை ரூபாய் கூடத் தர முடியாது என்ற சொல்லி வந்த சான்மினா நிர்வாகத்திடமிருந்து 310000+66000×428 கிட்டத்தட்ட ரூ.16 கோடியை, சங்கத்தால் பெற முடிந்தது.
பணிக்குழு ஒப்பந்தம் போடாது. எல்டியுசி இணைப்பு சான்மினா தொழிலாளர் சங்கம் தான் ஒப்பந்தம் போடும் என்று சொன்னோம். 24.10.2024 அன்று, வெற்றிகரமாக சான்மினா தொழிலாளர் சங்கம் (எல்டியுசி), சம்பள உயர்வு ஒப்பந்தம் போட்டது.
ஆறு பேரில் மூன்று பேர் வழக்கு காஞ்சிபுரத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும், தேவை இருப்பவர்கள் கணக்கு முடிக்கலாம், மற்றவர்கள் வழக்கு நடத்தலாம் என முடிவு எடுத்தோம். ஆறு பேரை வேலைக்கு எடுத்தால் தான் ஒப்பந்தம் போடுவோம் என்ற நிலை எடுப்பது கடினம் என்பதால், அந்த கோரிக்கையை, நாம் ஒரு கட்டத்திற்குப் பிறகு வலியுறுத்தவில்லை.
2015-16 ல் ரூ.1,200, 2016-17 ல் ரூ.2,000, 2017-18 ல் ரூ.3,750, 2018-19 ல் ரூ.3,800, 2019-20 ல் ரூ.2,250, 2020-21ல் ரூ.1,750, 2021-22ல் ரூ.3,000, 2022-23ல் ரூ.2,900 என, சராசரியாக ரூ.2,580 சம்பள உயர்வு தான், நிர்வாகம் தானாக வழங்கி உள்ளது என்பதைக் கணக்கில் கொண்டு, 01.10.2023 முதல் 30.09.2026 வரை வெல்ஃபேர் உள்ளடக்கிய சம்பள உயர்வும், 01.10.2018 முதல் 30.09.2023 வரையிலான காலத்திற்கு (லம்ப்சம்) ஒட்டுமொத்தத் தொகையும் பெறலாம் என, முடிவெடுத்தோம்.
இரண்டு சட்டபூர்வ காரணங்களை, தொழிலாளர்களிடம் சொல்ல முடியாத சங்கடம் நமக்கு இருந்தது. வழக்கில் பலவீனங்கள் இருப்பதாக நாம் பார்ப்பதாக நிர்வாகம் அறிந்து கொண்டால், பேச்சுவார்த்தையில் நமக்குச் சாதகமாக வர மாட்டார்கள் என்பதால், நிர்வாகிகளுக்கு மட்டும் மேலோட்டமாக சொல்லி, விட்டு விட்டோம்.
அ) 2024-2 எல்.எல்.ஜே பக்கம் 241-ல் பிரசுரமாகியுள்ள உச்சநீதிமன்றத்தின் விவிஎப் லிமிடெட் எம்பிளாயீஸ் யூனியன் வழக்கில், தீர்ப்பாயம் 29.03.2014 வழங்கிய சம்பள உயர்வு தீர்ப்பு, 09.04.2024 மீண்டும் தீர்ப்பாயத்திற்கே அனுப்பப்பட்டது. நிர்வாகத்தின் நிதிநிலை, ஒப்பிடத்தக்க நிறுவனத்தில் சம்பளம் என்ற பிரச்சினை கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதால், 2008 முதல் 2011-ஆம் ஆண்டு வரைக்குமான சம்பள உயர்வு என்ற வழக்கின் தீர்ப்பு ரத்தாகி, வழக்கு 2024 -ல் தீர்ப்பாயத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. 15-16 வருடங்கள் காலதாமதம் ஆனது. நமக்கு, அப்படி நடப்பதை சங்கம் விரும்பவில்லை.
ஆ) 2016-ல் அதிகபட்சம் ரூ.18 கோடி லாபம் என்பதை தீர்ப்பாயம் ரூ.272 கோடி லாபம் என, கிட்டத்தட்ட 14 மடங்கு கூடுதலாக கணக்கில் கொண்டு தீர்ப்பளித்துள்ளது. ரிசர்வ்ஸ் அண்ட் சர்ப்ளஸ் ரூ.272 கோடி என இருந்ததை, வரிக்கு முந்தைய /வரிக்குப் பிந்தைய லாபத்தோடு குழப்பிக் கொண்டுள்ளது என்று, உயர்நீதிமன்ற நீதிபதி ஆ.தண்டபாணி அவர்களே, தீர்ப்பளித்து சொன்னார். தீர்ப்பாயம் தவறாகக் குழப்பிக் கொண்டது என்பதை வைத்தே கூட, வழக்கை நிர்வாகம் இழுத்தடிக்க முடியும்.
இ) எது எப்படியானாலும், நாம் வழக்கில் வெற்றி பெற்றுள்ளோம். தீர்ப்பாயம், நிபந்தனையுடன் தடை, மேல்முறையீடு, மறுபரிசீலனை என்ற நான்கு கட்டங்களில், நிர்வாகத்திற்கு வெற்றி கிடைக்கவில்லை. தீர்ப்பாயம், தனி நீதிபதி சொன்ன தொகைகள் இல்லாவிட்டாலும், வேறு ஏதாவது தொகைகளையாவது வழக்கில் பெற முடியும் என, நம்பினோம். நிர்வாகத்தின் வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், நமக்கு பாதுகாப்பு உருவாக்க, நிர்வாகம் தர முன்வந்த தொகைகளை, பதிவு செய்து கொண்டே வந்தோம்.
தொழிலாளி தாமே தமக்கு கெடுதல் செய்து கொள்ளாமல் இருக்க, சங்கம் கஷ்டப்பட்டு பொறுமையாகவும், பொறுப்போடும் இருக்க வேண்டியுள்ளது. வெளியில் நமது பிரச்சனைகள்/ சங்கடங்களைச் சொல்லாமல் இருந்து, கவனமாகச் காய்களை நகர்த்தி, ஆகச் சிறந்த ஒப்பந்தம் முடித்தோம்.
22.10.2024 அன்று வாயில் கூட்டம் போட்டு, 24.10.2024 ஒப்பந்தம் போடும் தகவல் தெரிவித்தோம். ஏற்கனவே ஒப்புதல் பெற்றிருந்தோம்.
கடைசி நேரத்திலும் முயற்சி செய்து லம்ப்சம் தொகையில் ரூ.10,000 கூடுதலாக கிடைக்கவும், 01.10.2025 கிடைக்க வேண்டிய ரூ.792, 01.10.2024 முதலே கிடைப்பதற்கும் வழி செய்தோம்.
சான்மினா தொழிலாளர் சங்கம் இணைப்பு எல்டியுசி போட்ட 12(3) பிரிவு முத்தரப்பு ஒப்பந்தம் மூலம், ஒட்டுமொத்த தொகை ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.3,10,000 கிடைக்கும். சம்பளத்தில் 01.102023 முதல் ரூ.5,500, 01.10.2024 முதல் ரூ.4,500, 01.10.2025 முதல் ரூ.4,000 உயரும்.
01.10.2023 முதல் 30.09.2024 வரை 5,500கு12 ரூ.66,000 தொழிலாளிக்கு கிடைக்கும்.
01.10.2024 முதல் ஒரு தொழிலாளி சம்பளத்தில் ரூ.10,000 உயர்வு பெறுவார். சலவைப்படி ரூ.600, நல்லெண்ணப்படி ரூ.192 பெறுவார். மொத்தம் சம்பள உயர்வு ரூ.10,792 ஆக இருக்கும். இந்த ஆண்டு, பரிசுப் பொருளில் ரூ.5,000, ரூ7,500 ஆகும் விதத்தில், மாதம் ரூ.208 நிர்வாகம் கூடுதலாகச் செலவழிக்கும்.
01.10.2025 மேற்கொண்டு ரூ.4,000 உயர்வு என மொத்தம், 01.04.2025 முதல் ரூ.15,000 உயர்வு தரப்படும்.
நிர்வாகம், ஊக்க ஊதிய உயர்வு, ஷிப்ட் அலவன்ஸ் என்று சொன்னவற்றை, அனைவருக்கும் கிடைக்காது என்பதால் சங்கம் ஏற்கவில்லை.
ஒப்பந்தத்தில் புதிய உற்பத்தி, உற்பத்தி திறன் இலக்குகள் கிடையாது.
வழக்கமாக எல்லா ஒப்பந்தங்களிலும் இடம் பெறும் சரத்துக்களே இந்த ஒப்பந்தத்திலும் இருக்கின்றன. செல்வம், சரவணன் என்ற இரண்டு தொழிலாளர்கள் வழக்கு, பிறகு பேசப்படும்.
சென்றது இனி மீளாது மூடர்களே என்றான் பாரதி. நிர்வாகம் நாம் இன்னும் குறைவாக கொடுத்திருக்கலாமோ என நினைக்கலாம். அதேபோல் தொழிலாளர்களில் சிலர், இன்னும் கூடுதலாக வாங்கி இருக்கலாமோ என நினைக்கலாம். இந்த எண்ணத்தோடு இரு தரப்பினரும் ஒப்பந்தங்களை அணுகி இருந்தால், நம்பிக்கையுடன் ஒப்பந்தங்கள் போட்டிருக்கவே முடியாது.
மூன்று முறை வேலை நிறுத்தங்கள் செய்து, ஆறு பேர் வேலை நீக்கத்தைச் சந்தித்து, தியாகம் செய்து, தொழிலாளர்களுக்கு சில முறை சம்பள இழப்பு வந்து, கடைசியாக வழக்கில் வென்று தலை நிமிர்ந்து கவுரவமாக, சங்கம் மூலம் ஒப்பந்தம் போட்டு, சான்மினா தொழிலாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இந்த நேரத்தில் வழக்கு நடத்த உதவிய தோழர்கள் பாரதி, சுரேஷ், நிவேதா, சங்கம் நடத்த உதவிய தோழர்கள் ராஜகுரு, ராஜேஷ், நிர்வாகத்தின் மனிதவளத்துறை இயக்குநர் திரு.குமார், ஆண்டிமகேஸ்வரன், மகாலட்சுமி, செந்தில், அய்சக் ஆகியோருக்கும் ஒப்பந்தம் முடிக்க உதவிய கூடுதல் தொழிலாளர் ஆணையர் திருமதி.யாஸ்மின்பேகம், துணை ஆணையர் திரு.கமலக்கண்ணன் ஆகியோருக்கும் நன்றி சொல்கிறோம்.
சங்கே முழங்கு!
சான்மினா தொழிலாளர்கள் வென்றார்கள் என
சங்கே முழங்கு!
#sanmina
Leave a Reply