ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் வெல்க! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் கண்டன அறிக்கை….

28/9/2024

சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளையும், அதற்குத் துணைபோகும் தமிழ்நாடு அரசையும் கண்டிப்போம்!

2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாம்சங் இந்தியா ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இதுநாள்வரை தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசுவதற்கு சங்கம் அமைத்துக் கொள்வதை அனுமதிக்கவில்லை. நிர்வாகமே ஒரு குழுவை உருவாக்கி அதன் மூலமே தொழிலாளர் பிரச்சனைகளை அணுகிவந்தது. அதனால் 10 ஆண்டுகளுக்கும் மேல் வேலைசெய்யும் தொழிலாளர்கள்கூட ரூ.30,000-ற்கு மேல் சம்பளம் பெறமுடியாத நிலைநீடிக்கிறது. ஊதியஉயர்வு என்ற பெயரில் வெறும் ரூ. 2000 முதல் ரூ.3000 வரைமட்டுமே உயர்த்தித் தரப்பட்டது. கடுமையான வேலைப்பளு மற்றும் 8 மணிநேரத்திற்கும் மேலான வேலையுடன் அவசர தேவைக்குக்கூட விடுப்பு எடுக்க அனுமதிக்காமல், தொழிலாளர்கள் கொத்தடிமைகள் போன்று நடத்தப்படனர். இதனால் ,கடந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதி தங்களுக்கான ஒரு சங்கத்தை உருவாக்கினர். சி.ஐ.டி.யுவுடன் இணைக்கப்பட்ட சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (SWUI) என்ற பெயரிலான தங்களின் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டுமென்றும் நிர்வாகம் அமைத்துள்ள குழுவை கலைக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் தங்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் பணிநிலைமைகளை மாற்றி அமைக்கவும் தங்களது சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும், சாம்சங் நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில்தான் 09.09.2024 முதல் கடந்த இரண்டு வாரங்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மொத்தமுள்ள 1723 நிரந்தரத் தொழிலாளர்களில் 1550 பேர் உறுப்பினராக உள்ள சங்கத்தை அங்கீகரிக்க சாம்சங் நிர்வாகம் மறுத்துவருகிறது. சாம்சங் நிர்வாகம் தனது சங்கம் இல்லா கொள்கையை உலகம் முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் கடைப்பிடித்துவருகிறது. தென்கொரியாவில் உள்ள தொழிற்சாலையிலும் சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி அந்தத் தொழிலாளர்கள் உருவாக்கியுள்ள  NUSE போராடிவருகிறது. அந்த சங்கம் ஸ்ரீபெரும்புதூரில் நடந்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.  சாம்சங் நிர்வாகம் தனது சங்கம் இல்லா கொள்கையின் மூலம் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை அடக்க முயல்கிறது. .தற்போது போராடும் தொழிலாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பாவிடில் பணிநீக்கம் செய்துவிடுவதாக மிரட்டுகிறது அதையும் மீறித்தான் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். தென்கொரிய சாம்சங் தொழிலாளர் சங்கமும் போராட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சாம்சங் நிர்வாகத்தின் இந்தப் போக்கு இந்திய தொழிற்சங்க சட்டம் 1926, தொழிற்சங்க தகராறு சட்டம் 1947 மற்றும் ஐஎல்ஓ (ILO) தீர்மானங்கள் 87, 98 மற்றும் சர்வதேச தொழிலாளர் தர நிலைகள் (ILS) ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட உரிமைகளை வெளிப்படையாக மீறுகிறது.

பெரும்பான்மை சங்கத்துடன் விவாதித்து பிரச்சனைகளைத் தீர்க்க சாம்சங் நிர்வாகம் மறுக்கிறது. அது சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பணிக்குழுவுக்கு மட்டுமே அனுமதி. தொழிற்சங்கத்திற்கு அனுமதி இல்லை என்று வாதாடுகிறது. இது அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்காகும். அந்நிய முதலீட்டை ஈர்ப்பது என்பதின் பேரில் பன்னாட்டு கார்ப்பரேட்கள் கோரும் சலுகைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு ஒன்றிய மோடி அரசும் தமிழகத்தை ஆளும் தி. மு. க வின் ஸ்டாலின் அரசும் ஒப்பந்தங்களை உருவாக்கிக் கொள்வதன் விளைவாகவே இந்த நிலை உருவாகியுள்ளது. அதற்கு சேவை செய்யவே ஒன்றிய மோடி அரசு தொழிலாளர் விரோத 4 தொகுப்புச் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. அது அமலுக்கு வரும் முன்பே அதில் உள்ள அம்சங்களை கார்ப்பரேட் நிர்வாகங்கள் அமல்படுத்தத் துடிக்கின்றன. சாம்சங் நிர்வாகத்தின் அடக்குமுறையும் அதிலிருந்தே வருகிறது. சாம்சங் நிர்வாகத்தின் இந்த தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்துதான் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களது போராட்டத்தின் நோக்கங்களை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக செப்டம்பர் 16 (திங்கள்கிழமை) அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணி நடத்தத் திட்டமிட்டனர்.

தமிழக அரசின் கார்ப்பரேட் விசுவாசம்

தமிழக அரசோ காஞ்சிபுரம் நகரம் முழுவதும் ஏராளமான காவல்துறையினரைக் குவித்து சிஐடியு அலுவலகத்திலிருந்த அதன் மாநிலச் செயலாளர் முத்துக்குமாரை கைது செய்ததுடன், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுகொடுப்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துகளில் வந்த சாம்சங் தொழிலாளர்களையும் ஆங்காங்கே, பேருந்தை மடக்கி கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். போராட்டத்திற்காக வந்த 120-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். மேலும் காலையில் கைதுசெய்யப்பட்ட தோழர் முத்துக்குமாரை மாலை வரை எங்கு வைத்திருக்கிறோம் என்பதைக் கூட காவல்துறை தெரிவிக்கவில்லை. பின்னர் இரவு 8 மணியளவில் முத்துக்குமார், சசி, ரவி ஆகிய மூவரையும் ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்தது. இதன்மூலம் கார்ப்பரேட் நிறுவனமான சாம்சங் நிர்வாகத்தின் மீதான விசுவாசத்தை ஸ்டாலின் அரசு அப்பட்டமாகக் காட்டிக்கொண்டது.

தங்களது சட்டப்பூர்வமான ஜனநாயக உரிமையை வலியுறுத்தும் தொழிலாளர்கள் மீது தமிழக அரசின் காவல்துறை அடக்குமுறையைக் கையாண்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும். பன்னாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழிலாளர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் பறிப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க அரசும் மாநில தி.மு.க அரசும் அனுமதிக்கின்றன. அதேவேளையில் உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களின் மீது தாக்குதல் நடத்துவதுடன் சிறையில் தள்ளியும் கொடுமைப்படுத்துகின்றன.இந்தத் தொழிலாளர் விரோதப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும். தொழிலாளர் வர்க்கம் இந்த அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடி நிச்சயம் வெல்லும்.

சாம்சங் தொழிலாளர்களுக்கு, ‘சங்கம் அமைக்கும் உரிமை’ மற்றும் ‘கூட்டுப் பேரம் பேசும் உரிமை’ உள்ளிட்ட நாட்டின் சட்டங்கள் வழங்கியுள்ள உரிமைகளை உறுதிசெய்யவேண்டியது தொழிலாளர்  நலத்துறையின் கடமையாகும்.

ஆனால் தொழிலாளர் நலத்துறை நிர்வாகத்தின் நிர்பந்தத்திற்கு பணிந்து அதற்கு ஆதரவாகச் செயல்படுகிறது. இது தொழிலாளர் நலத்துறை அமைக்கப்பட்ட நோக்கத்திற்கே எதிரானதாகும். எனவே உடனடியாக தொழிலாளர் நலத்துறை தலையிட்டு தனது சட்டபூர்வமான கடமையை நிறைவேற்றுவதன் மூலம் தொழிலாளர்களின் சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமையைப் பாதுகாக்க வேண்டும். தொழிற்தாவாவில் தலையிட்டு தொழிலாளர்கள் உரிமையைப் பறிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபடுவதை எதிர்த்துப் போராடுவோம்.

சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கையையும் அதற்கு ஆதரவாக அடக்குமுறைகளை ஏவிவிடும் காவல்துறையையும் கண்டித்து தமிழகத்தின் முக்கிய தொழிற்சங்கங்கள் இணைந்து ஜனநாயக பூர்வமாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் 18.09.24 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய நிலையில் அதைமறுத்ததோடு ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களையும் கைதுசெய்து தனது கார்ப்பரேட்  விசுவாசத்தை அரங்கேற்றியுள்ளது தமிழக அரசு.

வாக்களித்த மக்களுக்கு விசுவாசம் காட்டுவதற்குப் பதிலாக பன்னாட்டு நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு துணைபோவது தமிழக மக்களுக்கே செய்யும் துரோகம் ஆகும். இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவே அந்நிய முதலீடுகளை ஈர்க்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலம், நீர், மின்சாரம் போன்றவற்றிக்கான சலுகைகளை அளிப்பதாக கூறும் தமிழக முதல்வர் தமிழக இளைஞர்களை பன்னாட்டு நிறுவனங்கள் கொத்தடிமைகளாக வேலைவாங்கிக்கொள்ளவும் அனுமதி அளித்தே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதை மூடிமறைத்து மக்களை ஏமாற்றும் செயல் தொழிலாளர்களின் போராட்டத்தின்போது அம்பலப்பட்டுப் போகிறது.

பாசிச மோடி அரசு கடைபிடிக்கும் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைக்கும், ஸ்டாலின் அரசின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைக்கும் வேறுபாடு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மொத்தத்தில் ஒருபக்கம் இந்து மதவாதம் பேசியும், இன்னொருபக்கம் சமூகநீதி பேசியும் உலகமய,தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஒன்றுபட்ட செயல்பாட்டையே ஒன்றிய மோடி அரசும் மாநில ஸ்டாலின் அரசும் கடைபிடிக்கின்றன. சாம்சங் விவகாரத்தில் இதைத் தெள்ளத்தெளிவாக உணர முடிகிறது.

காண்ட்ராக்ட்மயம்  எனும்  கொத்தடிமை  முறை

90களில் தாராளமயக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டது முதலே ஏற்கனவே இருந்த அரைகுறை தொழிலாளர் உரிமைகளும் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றன..2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு தாராளமயம் வேகப்படுத்தப் பின்னர் அன்னிய மூலதனங்களை ஈர்ப்பது, EASE OF DOING BUISNESS என்று நாடு முழுவதும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SPECIAL ECONOMIC ZONES) உருவாக்கப்பட்டு அன்னிய கார்ப்பரேட் மூலதனங்களுக்கு இலவசமாக மின்சாரம், தண்ணீர், சாலைவசதி, குறைந்தவிலையில் நிலங்கள், வரிச்சலுகைகள் அதனோடு இந்திய சட்டங்கள் எதுவும் அவைகளை கட்டுப்படுத்தாது என பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டன.

இதன் மூலம் அன்னிய கார்ப்பரேட்டுகள் NO UNION POLICYயை கடைபிடித்து தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்பட்டது. 8 மணி நேர பணிப்பாதுகாப்பு ஒழித்துக்கட்டப்பட்டது, OUTSOURCE LOGISTICS CONTRACT என நிரந்தர வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டது. இதைப் பின்பற்றி உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளும் இதேவழியில் தொடர்ந்தனர்.

மோடி அரசு வந்த பிறகு நேரடி உற்பத்தியிலும் தற்காலிகத் தொழிலாளர்களை ஈடுபடுத்திக்கொள்ள FTE (Fixed Term Employment) என்றும் NEEM மற்றும் NAPPS என பயிற்சியாளர் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இவ்வாறு பயிற்சியாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்துவதன் மூலம் தொழிலாளர்களின் நிரந்தர வேலைவாய்ப்புகள் இல்லாமல் ஆக்கப்படுகிறது. .இதன்மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை இலாபத்தைக் குவித்து வருகின்றன. இதுவே சாம்சங் தொழிற்சாலையிலும் நடக்கிறது. அதை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது.

எனவே சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கையும் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் ஜனநாயக விரோத, கார்ப்பரேட் விசுவாசத்தின் அடிப்படையிலான அராஜகத்தையும் எதிர்த்துகுரல் கொடுக்க வேண்டியதும் கண்டிக்க வேண்டியதும் வர்க்க உணர்வு மற்றும் ஜனநாயக உணர்வு கொண்டோர் அனைவரின் கடமையாகும்.

·         சாம்சங் தொழிலாளர் போராட்டம் வெற்றி பெற நமது ஆதரவை முழங்குவோம்!

·         சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டிப்போம்!

·         சாம்சங் நிர்வாகத்திற்கு ஆதரவான தமிழக அரசின் ஒடுக்கமுறையைக் கண்டிப்போம்!

·         தொழிலாளர்கள் சங்கம் அமைத்துக் கொள்வதை அடிப்படை உரிமையாக்கி சட்டம் இயற்ற ஸ்டாலின் அரசை வலியுறுத்துவோம்!

·         பாசிச மோடி அரசின் தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் ஆதரவு 4 சட்டத் தொகுப்புகளை ரத்துச்செய்யப் போராடுவோம்!

· தொழிலாளர்களுக்கு எதிரான சாம்சங் நிர்வாகத்தின் அடக்குமுறையையும், ஸ்டாலின் அரசின் ஒடுக்கமுறையையும் எதிர்த்து உழைக்கும் மக்கள் அனைவரும் அணிதிரள்வோம்.

                                                                                                                                                      இப்படிக்கு,                                                                                            பாலன்,                                     ஒருங்கிணைப்பாளர், பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி