நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்தவும், அந்த தேர்தலுக்கு பிறகு 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவும் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோயங்கா குழு கொடுத்த பரிந்துரையை மோடியின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகள் ஒரு கண்துடைப்பு மட்டுமே.பாஜ.க இந்த ஒரே நாடு,ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை அதன் தேர்தல் அறிக்கையில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. மக்களவையில் அதற்கு தனி பெரும்பான்மை இல்லாத போதும் அது கூட்டணி அரசு என்பதையும் மறந்து செயல்பட்டு வருகிறது.
நாடு என்ற வாகனம் மூன்று வகையான சனநாயக நிறுவனங்கள் என்ற சக்கரங்கள் மீது பயணிக்கிறது. அவைகள் பாராளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகும். இந்த மூன்று அமைப்புக்களும் ஒப்பீட்டளவில் ஒற்றுமை மிக்கவை. அரசியலமைப்பு சட்டம் பிரிவு 83 பாராளுமன்றத்தில் தேர்வான கட்சி ஐந்து ஆண்டுகள் ஆட்சி புரியவும், பிரிவு 172 மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி ஐந்தாண்டு ஆட்சி புரியவும் வழிவகை செய்கிறது. இந்த நிலையில் தேர்வான கட்சியின் ஆட்சியினை கலைத்து தேர்தலை சந்திக்க நிர்பந்திப்பது அடிப்படையில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
கடந்த 1952,1957 மற்றும் 1962 ஆகிய தேர்தல்கள் ஒரே நேரத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் நடந்துள்ளது. ஆனால் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் அல்லது ஆட்சிகள் கலைக்கப்பட்டு புதிய சட்டமன்றம் உருவான சூழலில் அந்த ஒரே தேர்தல் என்ற நிலை மாறியது. பா.ஜ.க ஒரே தேர்தலுக்கு தரும் விளக்கம் தேர்தல் மூலம் ஏற்படும் செலவை குறைக்க வேண்டும் என்பதாகும். தேர்தல் இந்த நாட்டில் சனநாயக வடிவத்தை தக்க வைக்க உதவுகிறது. அதற்கான செலவினை குறைத்து நாட்டில் வளத்தை பாதுகாக்க முயல்வதாக கூறுவது முழு பொய். ஏனெனில் ஒரு பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் ஆகும் செலவு சுமார் 4000 கோடி. இந்த பணத்தை சேமிப்பதால் எந்த சாமானிய மக்கள் வாழ்க்கையில் நன்மையை தரப் போகிறார்கள்? கடந்த மோடியின் ஆட்சியில் கார்பரேட் முதலாளிகள் வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி மட்டும் இந்த தொகையைப் போல் பல மடங்கு 16 இலட்சம் கோடி. இந்த கடன்கள் மக்களின் பணம் இதனை பாதுகாக்க தவறியவர்கள் ஒரே தேர்தல் நடத்தி பணத்தை மிச்சப்படுத்துவதாக கூறுவது வேடிக்கை.
இந்திய என்ற கூட்டாட்சி தத்துவத்தை ஒழித்து ஒற்றை ஆட்சி என்ற அதிகார மையத்தை நோக்கி வரி, நிதியம் மற்றும் அதிகார குவியல் தொடர்ந்து டெல்லியை மையப்படுத்தி நடத்தப்படுகிறது. மாநிலங்கள் ஒன்றியத்தின் பணியாளர்கள் போல் மாற்றப்படும் அதிகார குவியல் இந்தியா என்ற கட்டமைப்பை சர்வாதிகார ஆட்சியை நோக்கி தள்ளுவது நடந்து வருகிறது. மொழி உரிமை, தேசிய இனத்தின் அடையாளம் அழிப்பு போன்ற பல தரப்பட்ட தாக்குதல்கள் மாநிலங்கள் மீது நிகழ்கிறது . குறிப்பாக தென் மாநிலங்கள் இந்த பாதிப்பை அதிகம் எதிர்கொள்கிறது. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கூட்டாட்சி உரிமைகளை அழித்தொழிப்பு செய்ய வழி வகுக்கும். இந்த செயல்பாடு ஜனநாயகத்தை அழிக்கும் என முன்னாள் தேர்தல் அதிகாரி குரேசி மற்றும் உச்சநீதிமன்றம் முன்னாள் நீதிபதி ஜோசப் உள்ளிட்ட பல்வேறு ஆர்வலர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
சனநாயக நிறுவனங்கள் மீது பா.ஜ.க நடத்தும் மற்றொரு தாக்குதல் இது.
நாட்டு மக்களை அல்லது பல்வேறு சனநாயக மக்கள் குழுக்களை தொடர் அச்சத்தில் வைத்திருப்பது பா.ஜ.க ஆட்சியின் ஒரு செயல் யுக்தி.அதன் தொடர்ச்சியாக இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மக்கள் விரோத செயல்பாடு. இது மோடியின் பண மதிப்பு இழப்பு சட்டம் போல ஒரு தேவையற்ற ஆணி இதை எதிர்ப்போம்.
– தோழர் பாலமுருகன் (வழக்குரைஞர் ,சோளகர் தொட்டி நாவல் ஆசிரியர்) அவர்களின் முகநூல் பதிவு
https://www.facebook.com/share/p/RFKLfKJuSxcc7Fxj/?mibextid=oFDknk
Leave a Reply